ஜனாதிபதிக்கு ஆதரவான பேரணி மீது கல் வீசிய நபர் கைது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக அனுராதபுரம் நகரில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியின் போது பேரணியில் கலந்துக்கொண்டவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்திய நபரை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி ஆதரவாக வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் உட்பட சிலர் அனுராதபுரம் நகரில் ஆர்ப்பாட்ட பேரணியை ஒழுங்கு செய்திருந்தனர்.
அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர்.
அனுராதபுரம் புதிய நகரின் வங்கி பிளேஸ் பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட அலுவலகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர், மணிக்கூட்டு கோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு பேணரியாக சென்ற போது மருந்தகம் ஒன்றுக்கு அருகில் இருந்த நபர் பேரணியில் சென்றவர்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளார்.
உடனடியாக பொலிஸார் அந்த நபரை கைது செய்தனர்.
பேரணி நடைபெற்ற வீதியில் சிலர் புல் மற்றும் புண்ணாக்கு ஆகியவற்றை வைத்துள்ளனர். “தானசாலை எஞ்சி இருக்கும் மாடுகளுக்கு” என எழுதப்பட்ட பதாகை ஒன்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.