அலரி மாளிகையில் பெறுமதியான தொலைக்காட்சி பெட்டிகளை கொள்ளையிட்ட நபர் கைது
அலரி மாளிகையை போராட்டகாரர்கள் முற்றுகையிட்ட பின்னர், அங்கிருநத இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளை கொள்ளையிட்டு சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அலரி மாளிகையில் இருந்து இரண்டு 54 அங்குல தொலைக்காட்சி பெட்டிகளை கொள்ளையிட்டுள்ள இந்த நபர் சமையல் கலைஞராக தொழில் புரிந்து வருபவர் என கிருளைப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 ஆயிரம் ரூபாவுக்கு தொலைக்காட்சி பெட்டியை விற்பனை செய்த சந்தேக நபர்
இரண்டு தொலைக்காட்சி பெட்டிகளில் ஒன்று சந்தேக நபர் தங்கியிருந்த விடுதியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றைய தொலைக்காட்சி பெட்டி 10 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி பெட்டிகளில் பெறுமதி ஆறு லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையை போராட்டகாரர்கள் முற்றுகையிட்டு அதில் தங்கியிருந்தனர். போராட்டகாரர்கள் போல் மாளிகைக்குள் சென்ற நபர்கள், அங்கிருந்த பெறுமதியான மற்றும் தொன்மை வாய்ந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.