பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை திருடிய இளைஞன் கைது
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்த முதிய பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அறுத்துச்சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று(27.07.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இருதயபுரம் மேற்கு 8ம் பிரிவிலுள்ள முதியவரான பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சம்பவதினமான நேற்று மாலை 4.30 மணியளவில் சென்றுள்ளார்.
சந்தேகநபரை அடையாளம் கண்ட பொலிஸார்
இதன் பின்னர் அவர் வீடு திரும்பிய நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன் அவரின் கழுத்திலிருந்த ஒன்றரைப் பவுண் தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு அவரை தள்ளிகீழே வீழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து வீட்டில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமரா மூலம் குறித்த சந்தேகநபரை அடையாளம் கண்ட பொலிஸார் குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 4 வது வீட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்த தங்க சங்கிலியை மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகிவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |