போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது
அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேகநபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்முனை மாநகரசபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடவடிக்கையில் சந்தேகம்
இதன்போது போலி நகையை வங்கிக்கு அடகு வைப்பதற்காக வருகை தந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வங்கியின் ஊழியர் முகாமையாளருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட குறித்த வங்கி முகாமையாளர் கல்முனை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்ததுடன் சந்தேக நபரையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

கைதான சந்தேகநபர் குறித்த போலி நகையை கடற்கரை பகுதியில் கண்டெடுத்ததாகவும் பின்னர் கல்முனை நகர பகுதியில் உள்ள நகைக்கடையில் பெற்றுக்கொண்டதாகவும் முரண்பாடான தகவல்களை பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிணையில் விடுதலை
சுமார் 49 வயதுடைய குறித்த சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (20) முன்னிலை படுத்திய போது பிணையில் விடுதலை செய்யப்பட்டடுள்ளார்.
மேற்குறித்த விடயம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |