இலங்கையை போன்று திவாலாகும் அபாயத்தில் மலேசியா இல்லை! நிதி அமைச்சர் தகவல்
மலேசியா நிலையான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. எனவே அது இலங்கையை போன்று திவாலாகும் அபாயத்தில் இல்லை என்று மலேசிய நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜிஸ் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 5.75 சதவீதம் வளர்ச்சியடையும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு தமது நம்பிக்கைக்கான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
திவாலாக்கும் பொருளாதார சிக்கலை மலேசியா எதிர்கொள்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் கூறவில்லை என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
மலேசியா பொருளாதாரத்தின் வளர்ச்சி
மலேசியாவின் பொருளாதார குறிகாட்டிகளை இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மலேசியாவின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்தை விட மிகவும் நிலையானது என்பது தெளிவாகிறது.
எனினும் அரசாங்கம் இன்னமும் நாட்டின் நிதியை விவேகத்துடன் நிர்வகித்து கடன் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ப்ளூம்பெர்க் கணக்கின் ஒரு வருட இயல்புநிலை நிகழ்தகவு இலங்கையின் 19.4
சதவீதத்துடன் ஒப்பிடும்போது மலேசியாவில் 2.43 சதவீதமாக உள்ளது என்றும் மலேசிய
அமைச்சர் குறிப்பிட்டார்.