பார்வையிழந்த நிலையிலும் இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கையில் வெற்றிகண்ட விவசாயி
வவுனியாவில் - புளியங்குளம் கல்மடு கிராமத்தில் வசிக்கும் த. தவராசா என்ற 67 வயதுடைய பார்வையிழந்த விவசாயி தமது இயலாமையிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கொண்ட விவசாயம் இன்று வெற்றியளித்துள்ளது.
வட மாகாண விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இஞ்சி மற்றும் மஞ்சள் விதைகளைக் கொண்டு தனது காணியில் சுமார் ஒரு பரப்பில் செய்த செய்கையானது இன்று வெற்றியளித்துள்ள நிலையில் அறுவடைக்காகக் காத்திருக்கின்றார்.
நாட்டில் மஞ்சளுக்கு ஏற்பட்டுள்ள சந்தை வாய்ப்பை கருத்தில் கொண்டு விவசாய திணைக்களத்தினை நாடிய இவர் அவர்களது ஆலோசனையின் பிரகாரம் மஞ்சளுடன் இஞ்சியையும் செய்கை பண்ணியிருந்தார்.
பார்வை இழந்த நிலையிலும் தனக்கு உதவியான ஒருவரை பணிக்கு அமர்த்தி அவர் மூலமாக சில பயிர்காப்பு செயற்பாடுகளை மேற்கொண்ட தவராசா இன்று தனது நிலத்தில் பயிரிடப்பட்ட மஞ்சளும் இஞ்சியும் சிறப்பாக வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருப்பதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இன்றைய தினம் வட மாகாண விவசாய திணைக்களத்தினால் அவரது விளை நிலத்தில் வயல் விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டு அறுவடைக்கான ஏற்பாடுகள் மற்றும் சந்தைவாய்ப்புகள் தொடர்பில் தெளிவூட்டல்கள் அவருக்கும் ஏனைய விவசாயிக்கும் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் வட மாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமாரன், வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்நாயகம், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலளார் ரி. தர்மேந்திரா, வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.தணிகாசலம் ஆகியோரும் வயல் விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.