சர்ச்சைக்குரிய கிரிஷ் திட்ட வழக்கு : தொடர்ந்து விலகும் நீதிபதிகள்
புதிய இணைப்பு
சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' திட்டம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிராக தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட இரண்டாவது மேல் நீதிமன்ற நீதிபதியும் வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, தனக்கு எதிரான சமீபத்திய சமூக ஊடக கருத்துக்களை மேற்கோள் காட்டி, இன்று (27) வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவிடம் (Sujeewa Nissanka) பரிந்துரைக்கப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, உயர் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க, தாமும் வழக்கு விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, வழக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு பொருத்தமான நீதிபதியை நியமிக்க, மே 21 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சனத் பாலசூரிய மற்றும் போத்தல ஜெயந்த என்ற இரண்டு நபர்கள் தனக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட இரண்டு பதிவுகளைத் தொடர்ந்து, இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்
அதன்படி, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு பொருத்தமான நீதிபதியை நியமிக்க, வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதித்ய படபெந்திகேவிடம் பரிந்துரைக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் சமீபத்தில் கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா திலகரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
