மட்டக்களப்பில் பெரும்போக நெல் அறுவடை பாரிய நட்டம்: விவசாயிகள் ஆதங்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்போக நெல் அறுவடையில் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்தோாடு, பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் அதற்குரிய நட்ட ஈடுகளை தந்து உதவுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மட்டக்களப்பு - படுவான்கரைப் பெருநிலப்பகுதியின் பெரும்போக வேளாண்மை செய்கையே இவ்வாறு பாதிப்படைந்துள்ளது.
நெல்மணிகளில் கறுத்த புள்ளிகள்
கடந்த வருட இறுதியிலும், இந்த வருட ஆரம்பதிலும் ஏற்பட்ட அடை மழை, மற்றும் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாகவும், வேளாண்மைச் செய்கை வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டதால் அதிலிருந்து எதிர்பார்த்த அறுவடை கிடைக்காமல் போயுள்ளது.
இந்தநிலையில், அறுவடை செய்யப்பட்ட மீதமான நெல்மணிகளில் கறுத்த புள்ளிகள் மற்றும் நிறை குறைவாகவும் அதிகம் பதராகவும் காணப்படுவதனால் இந்த முறை எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காததால் பாதிப்புக்கு உள்ளான தமக்கு, உரிய நட்ட ஈட்டை தந்து உதவுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கடந்த வருடம் ஏக்கருக்கு 30 மூடைகள் கிடைத்த போதும் தற்போது 15 மூடைகள் அளவில் கிடைப்பதாகவும், விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் வேண்டுகோள்
தாம் வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடைகளில் எண்ணை, பசளைகளை, கடனுக்குப் பெற்றுள்ள போதும் தற்போது அதற்குரிய அறுவடை இலாபத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் எனவே ஜனாதிபதி விவசாயிகளின் பாதிப்புக்களை கவனத்தில் கொண்டு தங்களுக்குரிய இழப்பீடுகளை தந்து உதவுமாறு விவசாயிகள் கோரியுள்ளனர்.
வயல்கள் ஈரமாக காணப்படுவதனால் அறுவடை செய்வதில் பெருத்த சிரமங்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வியாபாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று தங்களுக்கு வேண்டிய அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |