பேருந்து சேவைகளில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய சீர்திருத்தங்கள்
பேருந்துகளில் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி அமைப்புகளை நிறுவுதல் மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் என்ற ஆசனப்பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குதல் உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் தேசிய போக்குவரத்து ஆணையகம், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ஒன்பது மாகாணங்களின் பயணிகள் போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்ற கலந்துரையாடலில் இந்த முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பொதுப்போக்குவரத்துத் திணைக்களத்தை மேம்படுத்துவது தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய முடிவுகள்
அதன்படி, • பேருந்துகளுக்கு ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி நிறுவலை முறைப்படுத்துதல்.
• இணைய அனுமதிச்சீட்டு முன்பதிவுக்கான ஒரு வழிமுறையை முறைப்படுத்துதல்
• பேருந்து ஓட்டுநர்களிடம், அடிக்கடி போதைப்பொருள் மற்றும் மதுபான சோதனைகளை நடத்துதல்.
• அனுமதிச்சீட்டு இயந்திரங்கள் மூலம் அனுமதிச்சீட்டுக்கள் வழங்கப்படுவதை கட்டாயமாக்குதல்
• பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கான விபரக்குறிப்புகளைத் தயாரித்தல்.
• பேருந்து ஓட்டுநர்களுக்கு இருக்கை( ஆசனப்) பட்டிகளை கட்டாயமாக்குதல்.
• புதிய பேருந்துகளுக்கான வழித்தடங்களை அடையாளம் காணுதல் போன்ற முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்த முடிவுகளை செயற்படுத்துவது தொடர்பான ஆரம்ப பணிகள் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த முடிவுகளை செயல்படுத்துவது தொடர்பான முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
