வர்த்தமானியின் தாமதம்: வைத்திய துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்
வர்த்தமானி ஒன்றை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இலங்கையில் 200க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள், முன்கூட்டியே ஓய்வு பெறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை 63 ஆக நீடிக்கும் வகையில், ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
அமைச்சரவையும், 2024 ஜூன் 19ஆம் திகதியன்று, இதற்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. எனினும் பொது நிர்வாக அமைச்சு, இன்னும் அதனை வர்த்தமானி மூலம் அறிவித்து நடைமுறைப்படுத்தவில்லை.
60 வயதில் ஓய்வு
முன்னதாக 60 வயதில் ஓய்வு என்ற சுற்றறிக்கை காரணமாக, பெருமளவான வைத்திய நிபுணர்களுக்கு வெற்றிடங்கள் ஏற்படும் என்று அச்சம் வெளியிடப்பட்ட நிலையிலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
எனினும், இந்த தீர்ப்பு செயற்படுத்தப்படாமை காரணமாக, எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 60 வயதை எட்டும் 200க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவ நிபுணர்களிடையே நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஓய்வுப்பெறப்போகும் வைத்திய நிபுணர்கள், பிரச்சினையை தீர்க்க அமைச்சின் பதிலை எதிர்பார்த்திருப்பதாக வைத்திய நிபுணர்களை கோடிட்டு கொழும்பின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |