யாழில் மாவை சேனாதிராஜாவை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி (Photos)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு மாவை சேனாதிராஜாவினுடைய மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் இன்றையதினம்(30.06.2023) இரவு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின்போது தமிழ் மக்களுடைய இன பிரச்சனைக்கான தீர்வு மற்றும் நாட்டில் நிலவுகின்ற மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்கான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
சைவ உணவகத்தில் விருந்து
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.நகரில் உள்ள சைவ உணவகமொன்றில் உணவருந்தி உள்ளார்.
மூன்று நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மதியம் யாழ் நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சைவ உணவை உணவருந்தியுள்ளார்.
தொடர்ந்து உணவகத்தில் உணவு உண்பதற்காக வருகை தந்தவர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடியதுடன், முன்னாள் ஜனாதிபதியுடன் உணவகத்தில் நின்றவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.
அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன, பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
காணி விடுவிப்பு விவகாரம்
வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள் கருத்துகளை கேட்டறிந்தார்.
யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று (30) மாலை வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கங்களை சந்தித்தார்.
தனது 2015 - 19 ஜனாதிபதி ஆட்சிக்காலப்பகுதியில் வலி வடக்கின் பெரும்பாலான காணிகளை உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்து மக்களுக்கு கையளித்திருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களால் நேரில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அவரது இப்பணியின் பயனாகவே பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம், இலங்கை இந்திய விமான, கப்பல் போக்குவரத்துகள் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான செயற்றிட்டங்கள் சாத்தியமாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாமல் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் மக்களது காணிகள் தொடர்பாக அவர் இச்சந்திப்பில் கேட்டறிந்தார்.
விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் தொடர்பாக விளக்கங்களை வலி வடக்கு பிரதேச
செயலாளர் திரு. சிவஸ்ரீ இக்கலந்துரையாடலில் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து பலாலி, மயிலிட்டி, வசாவிளான் மீள்குடியேற்ற சங்கங்களின்
பிரதிநிதிகளுடன் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார்.
செய்தி-தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |












