வடக்கிலுள்ள மக்கள் அரசியல் தலைவர்கள் சந்திப்பதற்கு விரும்பமாட்டார்கள்! கந்தையா பாஸ்கரன் (Photos)
யாழ்ப்பாணத்திற்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ஐ.பி.சி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவரும் தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் அவர்களை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்றையதினம்(02.07.2023) ஐ.பி.சி தமிழ் யாழ்ப்பாண கலையகத்தில் இடம்பெற்றுள்ளது.
மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில், தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகள் மற்றும் சமகாலத்தில் தமிழர் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்கள் தொடர்பில் கந்தையா பாஸ்கரன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் எடுத்துரைத்துள்ளார்.
இதேவேளை தெற்கிலிருந்து வடக்கிற்கு வருகை தரும் அரசியல் தலைவர்கள் பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.
ஜனாதிபதியின் ஆதரவு தேவை
ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல்,வெறும் வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. தற்போது நீங்கள் வழங்கும் வாக்குறுதிகளையும் மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள்.
அரசியல் தலைவர்கள் தொடர்ந்து இவ்வாறு செயற்படுவார்களானால் வடக்கிலுள்ள மக்கள் அரசியல் தலைவர்கள் சந்திப்பதற்கு விரும்பமாட்டார்கள்.
எனவே தமிழ் மக்களின் தீர்வு விடயங்களில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவு தேவை என கந்தையா பாஸ்கரன் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.







