உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இந்தியாவை சாடிய மைத்திரி : ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் இந்தியாவைத் தொடர்புபடுத்தும் சர்ச்சைக்குரிய கருத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) குற்றஞ்சாட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இந்தியா இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
தாக்குதலுக்கான காரணம்
அத்துடன் ஒரு இந்திய இராஜதந்திரி, தாக்குதல் குறித்து தன்னிடம் ஒப்புக்கொண்டது மட்டுமின்றி அதற்கான காரணத்தையும் தன்னிடம் கூறியதாக, தேசிய செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி ஹர்ஷ டி சில்வா சில்வா தமது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எந்தவொரு அபிவிருத்தி திட்டங்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை பரிசீலிக்காததே தாக்குதலுக்கான காரணம் என்று அந்த இந்திய இராஜதந்திரி கூறியதாக மைத்ரி குறிப்பிட்டுள்ளார்.
மைத்ரியின் குறித்த கூற்றுக்கள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய ஹர்ஷ டி சில்வா, இது மிகவும் பொறுப்பற்ற கருத்து என குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானால் இதுவரை மைத்ரிபால கூறிய அனைத்து அறிக்கைகளுக்கும் என்ன ஆனது? இந்தப் பிரச்சினையில் இன்னொரு நாட்டை இழுப்பதில் இன்னும் பல சிக்கல்கள் எழும்.
இந்தநிலையில் மனநலப் பிரச்சினை உள்ள ஒரு தூதரக அதிகாரியைத் தவிர, வேறு யாராவது இப்படி வாக்குமூலம் கொடுப்பார்களா?” என்று ஹர்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளியிடப்பட்ட அறிக்கை
அத்தகைய அறிக்கையை வெளியிட மைத்ரியிடம் ஆதாரம் இருக்க வேண்டும். தம்மை பொறுத்தவரையில், இரண்டு நாடுகளுக்குமிடையில் இராஜதந்திர பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையாகவே இதனை பார்ப்பதாக சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இரத்தினபுரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் பல உண்மைகளை வெளியிட்டார்.
2015 ஆம் ஆண்டு அதிகாரத்தை இழந்த ஊழல் குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதல் நாடகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஐந்து வருடங்களாக இந்தச் செயலை அவர்கள் நன்கு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளனர். .
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளபடி, சஹ்ரான் ஹாஷிம் 2017 இல் 'தௌஹீத் ஜமாத்' அமைப்பை விட்டு வெளியேறினார்.
அவருக்கு உதவியவர்கள், அவரை அழைத்துச் சென்றவர்கள், தாக்குதலை நடத்திய விதம் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். “சஹ்ரான் மோதல்கள் எழுந்த ஒவ்வொரு இடத்துக்கும் சென்று, வகுப்புகளை நடத்தி, முஸ்லிம் இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
இந்த ஐந்து வருட சதித்திட்டத்தின் பின்னரே கோட்டாபய ராஜபக்சவின் நியமனம் இடம்பெற்றது என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |