சர்வதேச மன்னிப்புச்சபை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கை
அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தினால் பயங்கரவாத தடைச் சட்டத்துடன் தொடர்புடைய வகையில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய 7 பரிந்துரைகளையும் அச்சபை முன்வைத்துள்ளது.
எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி ஒருவரை நீண்ட காலத்திற்குத் தடுத்து வைப்பதற்கான வாய்ப்பை வழங்கும் இச்சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுமையைத் தமிழ்பேசும் தரப்பினர் தற்போதும் தாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்றும் அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இன்னமும் வழக்குப்பதிவு செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த 34 வயதான டிவனியா முகுந்தன், 28 வயதான செல்வநாயகம் சசிகரன், காத்தான்குடியைச் சேர்ந்த 23 வயதான மொஹமட் இமாம் ஆகியோரை விடுவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பிரகாரம் கொண்டிருக்கக்கூடிய கடப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.



