இலங்கையில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கான முக்கிய காரணம் வெளியானது
நாடு எதிர்கொண்டுள்ள மின்சார நெருக்கடிக்கு காடு அழிப்பும் ஒரு முக்கிய காரணம் என சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் 16 வீதமாக காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதே நிலத்தடி நீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என இயற்கை ஆய்வு மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான நீர் இருப்பு பற்றாக்குறையை நாம் தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக சுற்றாடல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்த்தேக்கங்களின் கணிசமான வீதம் மண்ணால் நிரம்பியுள்ளதாகவும், இலங்கைச் சூழல் வெப்பமயமாதல் காரணமாக ஆவியாதல் அதிகரித்துள்ளமையினால் நீர்த்தேக்கங்களின் நீர் இருப்புக்கள் விரைவாகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், தினசரி மின் உற்பத்தியில் நீர்மின்சாரத்தின் பங்களிப்பு சுமார் 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்த நாட்களில், தினசரி மின்சார உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இதற்கு அதிக நிலக்கரி, டீசல், எரிபொருள் மற்றும் பிற எரிபொருட்கள் தேவைப்படுகிறது. தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடியால் எரிபொருள் இறக்குமதியும் சவாலாக உள்ளது.
எதிர்வரும் காலங்களில் மழை பெய்யாவிட்டால் நாட்டில் மின் உற்பத்தியில் பெரும் நெருக்கடி ஏற்படும் என மின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.




