மகிந்தவின் பக்கத்தில் தொடர்புகளை பேணும் சாணக்கியன்: எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்
நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன், மகிந்தவின் பக்கத்தில் இன்னும் தொடர்புகளை பேணி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை - காரைதீவு கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியும், சமகால அரசியலும் எனும் கருப் பொருளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மக்கள் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்கள் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் என்ன நடக்கின்றது என்பது மக்களுக்கு தெரியும்.
ராஜபக்சர்களின் திட்டம்
நாட்டு மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராஜபக்சர்களிடம் திட்டம் உள்ளதாக எமக்கு தெரியவந்தது.
அதன்படி ரணில் விக்ரமசிங்கவிடம் பதவியை வழங்குவதாகவும், அவர் அதை பத்திரமாக வைத்திருந்து தம்மிடம் திருப்பி தருவார் எனவும் ராஜபக்சர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த விடயம் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதற்கு 3 கிழமைக்கு முன் எமக்கு கிடைத்த தகவல் ஆகும்.
அந்த தகவல் முதலில் சாணக்கியனுக்கே தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே எனக்கு சாணக்கியன் கூறினார்.
கட்சி கூட்டம்
எனவே சாணக்கியனிற்கு மகிந்தவின் பக்கத்தில் இன்னும் தொடர்புகள் இருக்கின்றன. அந்த தொடர்பு நன்மைக்காகவே இருக்கின்றது.
இவ்விடயங்கள் குறித்து எமது கட்சி கூட்டத்திலும் நான் தெரிவித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.