மகிந்தானந்த - நளின் பெர்னாண்டோவுக்கு பிணை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பான மோசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மகிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் நந்த மல்லவாராச்சி ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குறித்த மூவருக்கும் இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை
இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன பிரதிவாதிகள் மூவரையும் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
எனினும், இந்த வழக்கின் பிரதிவாதிகளான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு ஏற்கனவே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த நீதிமன்றத் திகதியில் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.



