மஹிந்தானந்த அளுத்கமகே - நளின் பெர்னாண்டோவின் பிணை மனு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சமர்ப்பித்துள்ள பிணை மனு தொடர்பான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கரம் போர்ட் கொள்வனவு ஊழல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தலா 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தண்டனைக்கு எதிராக அவர்கள் இருவரும் மேன்முறையீடு செய்துள்ளதுடன், அதனடிப்படையில் தங்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
சிறைத்தண்டனை
குறித்த பிணை மனு இன்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
குறித்த அமர்வில் உயர்நீதிமன்ற நீதியரசர்களான மஹேஷ் வீரமன், பிரதீப் அபேரத்ன, அமாலி ரணவீர ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.
இந்நிலையில் மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சமர்ப்பித்துள்ள பிணை மனு தொடர்பான அறிவித்தல் தமக்குக் கிடைக்கப் பெறவில்லை என்று இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.
அதனையடுத்து, பிணை மனு தொடர்பான அறிவித்தலை இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், குறித்த மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



