மகிந்தவை மன்னர் என வர்ணித்தனர்! செனரத் திஸாநாயக்க
சந்தஹிரு சேய தாது கோபுரத்தை நிர்மாணிக்க தேவையான காணிக்கான அனுமதியை தன்னை பலவந்தப்படுத்தி பெற்றுக்கொண்டனர் என இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி. செனரத் திஸாநாயக்க (Senarath Dissanayake) தெரிவித்துள்ளார்.
சிங்கள வலையெளித்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
குறித்த காணி அமைந்துள்ள இடத்தில் தாது கோபுரம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டாம் என நான் கோரினேன். தேவையாக இருந்தால் சிறிய தாது கோபுரம் ஒன்றை நிர்மாணிக்குமாறு கூறினேன்.
எனினும் தனது ஆலோசகர்கள் வழங்கிய ஆலோசனைகள் காரணமாக அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நான் வழங்கிய ஆலோசனையை கேட்கவில்லை.
மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியவர்கள் அவரை மன்னன் என வர்ணித்திருந்தனர். நாட்டை ஆட்சி செய்த ஏனைய மன்னர்கள் தாது கோபுரங்களை நிர்மாணித்துள்ளதால், நீங்களும் நிர்மாணியுங்கள் என அவர்கள் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.
எவ்வாறாயினும் சந்தஹிரு சேய தாது கோபுரத்தை நிர்மாணிக்க செலவிட்ட பணம் அநியாயமானது. அதனை போரில் அங்கவீனமுற்ற படையினருக்கு செலவிட்டிருந்தால் நல்லது.
போர் வெற்றிக்காக நாட்டை ஆட்சி செய்த எந்த மன்னர்களும் தாது கோபுரங்களை நிர்மாணிக்கவில்லை. ஆனால், இந்த தாது கோபுரம் போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரச சேவை மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் அழுத்தங்கள் இதற்கு காரணம் எனவும் செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
30 வருடங்களுக்கு மேலாக இலங்கை தொல்லியல் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த செனரத் திஸாநாயக்க அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, தற்போது களனி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரிவுரையாளராக கடமையாற்றி வருகிறார்.