மகிந்தவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சிங்கள மக்கள் கொடுத்த பேரடி(video)
இலங்கை வரலாற்றில் ராஜபக்சக்களை அசைத்துவிட முடியாது என்கிற பெரும் நம்பிக்கை இரண்டே ஆண்டுகளில் தகர்த்தெறியப்பட்டிருக்கிறது.
இலங்கை ஆட்சியதிகாரத்தை அலங்கரிப்பவர்கள் சிங்கள பௌத்த மேலதிக்க சிந்தனை மக்கள் மத்தியில் கொண்டு சென்றால் அனைத்தும் கைக்கு கிட்டிவிடும் என்கிற நம்பிக்கை ராஜபக்சக்களின் மனங்களில் ஆழப்பதிந்த ஒன்று. அதற்கு பல காரணங்களும் உண்டு.
வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப்பார்த்தால், வெள்ளையர்களின் வருகையின் பின்னர் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள பெளத்த மதத்திற்கு மாறி ஆட்சியை முன்னெடுத்தவர்கள் தொடர்பில் கற்று இருக்கிறோம். அவற்றை முழுமையாக ராஜபக்சக்களும் பின்பற்றியிருந்தனர்.
இன்று ராஜபக்சக்கள் இலங்கையில் இத்தனை அதிகார தோரணையில், சிங்கள மக்கள் மத்தியில் பேரெழுச்சி கொள்வதற்கு முக்கிய பாத்திரம் மகிந்த ராஜபக்ச என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. சிங்கள மக்களால் கடவுளுக்கு நிகராக அடுத்த துட்டகைமுனு மன்னனாகப் பார்க்கப்பட்டவர் மகிந்த ராஜபக்ச. அவரின் எழுச்சி என்பது மிகச் சாதாரணமானதாக அமைந்திருக்கவில்லை என்பதும் வரலாறு தான்.
அம்பாந்தோட்டையில் வீரக்கெட்டியவில் டி. ஏ. ராஜபக்சவின் இரண்டாவது மகனாகப் பிறந்த மகிந்த ராஜபக்ச, குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்தாளும், அரசியல் நடவடிக்கையில் துடிப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.
ஆரம்ப காலம் முதல் சிங்கள பௌத்த இனத்தின் மீதான தீவிர பற்றாளனாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்ட அவர், 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியில், சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக பின்னர் பிரதமராக தன்னை தானே வளர்த்துக் கொண்டார் அதே சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையின்பால். தொடர்ச்சியாக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தன்னை வளர்த்துவிட்ட சந்திரிக்காவை பின்னுக்குத்தள்ளி, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாகை சூடினார் மகிந்த.
இந்த தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக மாறியது என்பதும் வரலாறாகப் பதியப்பட்டது. இன்னொரு வடிவத்தில் கூறின், ராஜபக்சக்களின் பேரெழுச்சி என்று வர்ணிக்கும் அளவிற்கு அவர்களின் அரசியல் செயல்பாடுகள் அமைந்திருந்தன. 2005ஆம் ஆண்டு தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தான் ஜனாதிபதியாக வருவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. எனினும் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறின.
தேர்தல் வெற்றியின் பின்னர் 2002ஆம் ஆண்டு போடப்பட்ட சமாதான ஒப்பந்தம் தூக்கி வீசப்பட்டது. விடுதலைப் புலிகளுடனான இராணுவப் போரை ஆரம்பித்தது ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம். அண்ணன் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக முப்படைகளின் தளபதியாக மிரட்ட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக அதிகாரத்தை கையில் எடுத்தார் கோட்டாபய ராஜபக்ச.
உலக நாடுகளின் உதவியுடன் புலிகளுக்கு எதிரான போரை உத்வேகப்படுத்தியது ராஜபக்ச தரப்பு. 2006, 2007, 2008, என்று தொடர்ச்சியாக கிழக்கிலிருந்து வேகமெடுத்த இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு, மெல்லமெல்ல வடக்குள் நுழைந்து இறுதியாக 2009ஆம் ஆண்டு மே 18ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நந்திக் கடலில் போய் நின்றது. அதுவரை வெறும் ராஜபக்சவாக இருந்த மகிந்த, இலங்கை சிங்கள மக்களின் பேரரசனாக உயர்த்தப்பட்டார்.
வரலாற்று நெடுங்கிலும் வெற்றி வாகை சூடி வந்த சிங்கள மன்னர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டார். தமிழ் மன்னனாக எல்லாள மன்னனை தோற்கடித்து சிங்கள பௌத்தத்தை தலை நிமிரச் செய்த துட்டகைமுனுவின் மறு அவதாரமாக பார்க்கப்பட்டார். இலங்கையில் ராஜபக்ச குடும்பமே சிங்கள இனத்தையும் பௌத்த மதத்தையும் காப்பாற்றும் மீட்பர்களாக காட்சியளித்தார்கள்.
இவற்றுக்கெல்லாம் காரணம், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசில் ஆட்சியேற்ற எவராலும் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனையும் வெல்ல முடியாது, கொல்ல முடியாது என்று நினைத்திருந்த தருணத்தில் போரை முடித்து, இலங்கை முழுவதையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தார்கள் என்ற மார் தட்டல்கள்.
யுத்த வெற்றியும், அதன்பால் கிடைத்த கௌரவமும், ராஜபக்ச தரப்பிற்கு தலைமேல் கிடைத்த நிரந்தர கிரீடமாகக் கொண்டனர். அதன் தொடர்ச்சியாக அடுத்து நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றிவாகை சூடினார். சிங்கள பௌத்த மக்கள் மீண்டும் தங்களை ஆளும் பொறுப்பை ராஜபக்சக்களின் கைகளில் கொடுத்தனர். ஆனால், ராஜபக்சக்களின் வெற்றி மமதை அவர்களின் கண்களை மறைக்க, தங்களை இனி யாரும் அசைத்து விடமுடியாது என்கிற ஆணவம் தலைக்கேற, வாக்களித்த மக்களை மறந்தனர்.
மறுபுறம், சர்வதேச நாடுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறினர். இந்திய, அமெரிக்க நாடுகளை புறம் தள்ளி, சீனாவின் பக்கம் தங்கள் கொள்கையை திருப்பினர். ஊழலும், அதிகாரத் திமிரும், ஆணவமும் மகிந்த ராஜபக்சவிற்கு 2015ஆம் ஆண்டு தேர்தலில் பாடத்தைப் புகட்டியது. ஜனாதிபதி தேர்தலில் தோற்றார். கூட இருந்த மைத்திரிபால சிறிசேனவே பிரிந்து சென்று ஜனாதிபதியாகி ஆட்சியமைத்தார்.
தேர்தல் முடிவுகள் மாறினாலும், ஆட்சி அதிகாரம் கையை விட்டுப் போனாலும், ராஜபக்சகள் பெற்றுக்கொடுத்த யுத்த வெற்றியை சிங்கள மக்கள் அப்போதும் மறக்கவில்லை. அவர்கள் மீதான நம்பிக்கையும், அவர்கள் மீதான கௌரவும் மரியாதையும் அப்படியே தான் இருந்தது. ஆட்சியை மட்டும் மக்கள் கொடுக்கவில்லை. அதற்கு வடக்க கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மைத்திரிக்கு விழுந்ததும் இன்னொரு கதை.
இவை ஒருபுறமிருக்க, மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றல், ஆட்சியேறுதல் கனவோடு ராஜபக்ச தரப்பு இறங்கி வேலை செய்தது எனலாம். பௌத்த விகாரைகளை மையப்படுத்தி, தமது தேர்தல் வேட்டையை ஆரம்பித்தார்கள். கூடவே, ரணில் மைத்திரி தரப்பின் அரசியல் மோதல்கள் கைகொடுக்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ராஜபக்ச தரப்பின் அரசியல் வருகைக்கு உயிர்ப்பு கொடுத்தது.
மீண்டும் இலங்கையில், பயங்கரவாத அடிப்படைவாத செயல்பாடுகள் உயிர்ப்பெற்றுவிட்டதாகவும், அவற்றை அடக்க மகிந்த ராஜபக்ச தலைமையிலானவர்களே பொருத்தமானவர்கள் என்கிற தோற்றம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் மூழு மூச்சாக பரப்பப்பட்டன.
தேர்தல் முடிவுகளும் இலங்கை மக்களை மட்டுமல்ல சர்வதேசத்தையும் வாய்பிளக்க வைத்தது என்றே சொல்லலாம். ஏனெனில், இலங்கை வரலாற்றில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி ஒரு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை கோட்டாபய படைத்தார். ஆட்சியதிகாரங்கள் கைமாறின. தம்பி ஜனாதிபதி அண்ணன் பிரதமர், பிரதமரின் மகன் அமைச்சர், ஜனாதிபதியின் மூத்த அண்ணன் இராஜாங்க அமைச்சர் என்று தங்களுக்குள் அதிகாரங்களை தக்க வைத்துக் கொண்டு மீண்டும் மகிந்தவின் அதிகார ஆட்டம் ஆரம்பித்தது. ஆனால், அத்தனையும் இரண்டே ஆண்டுகளில் சரிந்தன...
எங்கே நடந்தது தவறு....?
உண்மையில், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி வாகைசூடிய பின்னர் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் ராஜபக்ச தரப்பை அசைத்துவிட முடியாது என்கிற கருத்து இலங்கை முழுவதும் பேசப்பட்டது. இனி ராஜபக்சக்கள் மட்டுமே அதிகாரத்தை அலங்கரிப்பர். அவர்களை விரட்ட முடியாது என்கிற விம்பம் உருவானது. அந்த விம்பம் அவர்களின் கண்ணை மறைத்தது எனலாம்.
குறிப்பாக மீண்டும் ஊழல் தலைவிரித்தாடியது. தாங்கள் எடுக்கும் அத்தனை முடிவுகளுக்கும் தங்களை சிங்கள பௌத்த மக்கள் எதிர்த்து கேள்வி கேட்கமாட்டார்கள் என்று நம்பினார்கள். எது நடந்தாலும் மக்கள் தியாகத்தை செய்வார்கள் என்றும், தங்கள் மீதோ தங்கள் ஆட்சி மீதோ கை வைக்கமாட்டார்கள் என்றும் அசைக்க முடியாது என்றும் சிந்திக்கத் தொடங்கினர்.
அதன் விளைவாக மக்களின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் குறித்து கிஞ்சித்தும் யோசனை செய்யவில்லை. எடுத்த முடிவுகளிலிருந்து பின்வாங்கவும் தயார் இல்லாமல் இருந்தனர். ஆனால், இன்றைய தலைமுறையினர் வேறு என்பதை அவர்கள் மறந்தனர். மக்களின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை காட்டத் தொடங்க வேண்டிய காலம் கனிந்தது எனலாம்.
அதாவது, மக்களின் அறவழிப் போராட்டம் வீறு கொண்டால் என்ன நடக்கும் என்பதையே தற்போதைய நிலைமைகள் காட்டி நிற்கின்றன. குறிப்பாக, ராஜபக்ச தரப்பினரின் ஆட்சியின் மீதும், பொருளாதாரக் கொள்கையின் மீதும் அதிருப்தி கொண்ட மக்கள் அறவழியில் போராடத் துணிந்தனர். இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு எதிராக வடக்கு கிழக்கு மக்களின் போராட்டங்களே இலங்கையில் செய்திகளாகியிருந்தன.
முதல்முறையாக ராஜபக்ச தரப்பிற்கு எதிராக மக்கள் அறவழியில் திரண்டனர். பின்னர் மகிந்த ராஜபக்சவை வெளியேற்றும் அளவிற்கு போராட்டம் வலுப்பெற்றது. ஆனால் பதவியை துறக்கமறுத்தார் மகிந்த. தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க விரும்பினார். அதன் விளைவாக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இதுவரை காலமும் கடவுளுக்கு நிகராக போற்றப்பட்ட ஒருவரை, துட்டகைமுனுவின் மறு அவதாரமாக சிங்கள மக்கள் மத்தியில் வலம் வந்த யுத்த வெற்றி வீரனை அதே மக்கள் விரட்டத் துணிந்தனர். புலிகளை அழித்தேன், பிரபாகரனை வீழ்த்தினேன், சிங்கள பௌத்தத்தை மீட்டேன், என்கிற தோற்றப்பாடுகள் உடைக்கப்பட்டன.
ஏழையின் வயிற்றில் எவர் அடித்தாலும் அது பல மடங்கு வீரியத்துடன் துரத்தி துரத்தி தாக்கும் என்பதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசியலின் இறுதி அத்தியாயம் மிகப்பெரிய சான்று என்றால் அது மிகையன்று..
இலங்கையில் ஒரு இனத்தை அழித்து மறு இனத்தை வெற்றிக் கொண்டாட்டம் செய்ய வைத்து சாதித்ததாக மகிழ்ந்த ஒருவர் தன் சொந்த நாட்டிலேயே இருக்க முடியாமல் வேறு ஒரு நாட்டுக்கு தப்பித்து ஓட வைக்கும் அளவிற்கு நிலைமை கை மீறியிருக்கிறது.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடிந்ததாகவும் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், நாட்டை மீட்டதாகவும் மார்தட்டினார் மகிந்த ராஜபக்ச. அன்று விமான நிலையத்தில் வந்திறங்கிய வேளை, விமான நிலையத்தில் தரையை தொட்டு வணங்கி முத்தமிட்டார் மகிந்த. ஆனால் இன்னொரு பக்கத்தில் பிள்ளைகளை, கணவனை, சகோதரர்களை பறிகொடுத்து இன்னொரு இனம் மரண ஓலத்தை எழுப்பி கதறியது.
மறுபுறத்தில் பாற்சோறு சமைத்தும், மகிந்தவின் உருவப்படத்தை கடவுளுக்கு நிகராவும் மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், அதே மே மாதம், ஆனால் ஆண்டு வேறு... 13 ஆண்டுகள் கழித்து நிலத்தை முத்தமிட்டு பாற்சோறு சமைத்து உண்ண வைத்த மகிந்தவை விரட்டி விரட்டி நாட்டைவிட்டு ஓடும் அளவிற்கு மக்கள் ஆவேசம், ஆக்ரோஷம் கொண்டிருக்கிறார்கள்.
மகிந்த பதவி விலகியதை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து உண்டு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் அதே சிங்கள பௌத்த மக்கள். வரலாற்றில் கிரீடம் நிரந்தரமானது தான். ஆனால் அதை அணியும் தலைகள் வேறு என்பதை ராஜபக்சக்கள் மறந்துவிட்டனர் என்பது உறுதிப்படுத்தியிருக்கிறது.
வரலாற்றில் பிரபல்யமான சொற்றொடர் ஒன்று உண்டு, “கிரீடம் என்பது தலையில் அணிவதல்ல. அது மக்களின் மனங்களில் இருப்பது” அது யார் என்பதை இன்று இலங்கை மக்கள் அறிவர். ராஜபக்சக்களுக்கும் அது உணர்த்தியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.