மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரை உள்ளடக்கிய படுகொலைப் பட்டியல்! வெளிவரும் முக்கிய தகவல்கள்
விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தால் படுகொலை செய்ய திட்டமிடப்பட்ட அரசியல் முக்கியஸ்தர்களின் பெயர்ப் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச கட்டியெழுப்பிய அரசியல் ஆளுமை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எம்மிடம் எழுப்பப்படுகின்றது. இது தற்செயலாக உருவான அரசியல் செல்வாக்கு அல்ல. மகிந்த ராஜபக்ச கட்டியெழுப்பிய அரசியல் ஆளுமை இலங்கைக்குள் மட்டுமன்றி, சர்வதேச ரீதியிலும் அங்கீகாரம் பெற்ற ஒன்றாகும்.
இன்றும்கூட இந்த நாட்டின் அபிவிருத்தியைப் பற்றிப் பேசும்போது, அதில் மகிந்த ராஜபக்சவின் பங்களிப்பை மறந்துவிட முடியாது. குறிப்பாக, இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த பிரிவினைவாத விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடித்த விடயத்தை அனைவரும் அறிவோம்.

அந்தப் பயங்கரவாதத்தினால் எத்தனை அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் நினைவுகூர வேண்டும். பல அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில், மகிந்த ராஜபக்சவையும் அவரது முழுக் குடும்பத்தினரையும் படுகொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
அத்தயைச் சவால்களை எதிர்கொண்டு, மகிந்த ராஜபக்ச இந்த நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தார். அதற்காக இந்த நாட்டில் சாதாரண மக்களிடத்தில் அவருக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் இன்றும் இருக்கின்றது.
அதனால்தான் ராஜபக்ச அரசியல் குடையின் கீழ் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
you may like this