மகிந்தவின் நிழலில் உருவான இலங்கையின் பெரும் செல்வந்தர்கள்..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எப்படி யுத்தத்தை நிறுத்துவதற்கு தலைமை தாங்கினாரோ, அதேபோல பாரிய ஊழல் மோசடிகளுக்கும் அவர் தலைமை தாங்கினார். எனவே, ஊழல்வாதிகள் அனைவரும் பெரும் செல்வந்தர்களாயினர் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அநுரவுக்கும் இது பொருந்தும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்ட மூலத்திற்கு பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இது பொருந்தும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இல்லாதொழித்தவர்கள் தான் இன்று ஜனாதிபதி உரித்துரிமைகளை நீக்கும் சட்டத்துக்கு எதிராக பேசுகிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிபால ஆகியோர் அரச உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார்கள். அவர்கள் ஆதரவாளர்களை அழைத்து ஊடக கண்காட்சி நடத்தவில்லை. ஏனெனில் அவர்களுக்கு எதிர்கால அரசியலுக்கான எவ்வித தேவையும் கிடையாது.
இயற்றப்பட்ட இந்த சட்டம் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்காலத்தில் செல்லுபடியாகும். ஆகவே இது அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிடுவது முறையற்றது.
மகிந்தவின் தலைமை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யுத்தத்துக்கு தலைமை தாங்கினார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் யுத்த வெற்றியை குறிப்பிட்டுக் கொண்டு மக்களின் வரிப்பணத்தின் ஊடாக முழு குடும்பத்தையும் வளப்படுத்திக்கொள்ள முயற்சிப்பது எந்தளவுக்கு நியாயமானது.
இவர் யுத்தத்துக்கு தலைமை தாங்கியதை போன்று நாடு வங்குரோத்து நிலையடைவதற்கும் தலைமை தாங்கினார் என்பதை நாட்டு மக்கள் மறக்க போவதில்லை.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அரச ஆதரவுடன் ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. எவ்வித நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.
ஊழல்வாதிகள் செல்வந்தர்களாயினார்கள். நாட்டு மக்கள் ஏழையாகினார்கள். நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு ராஜபக்சர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பதை ஒருபோதும் மறுக்க என குறிப்பிட்டுள்ளார்.



