மகிந்த ராஜபக்சவின் அடுத்த வியூகம் என்ன?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ராஜபக்சர்கள் குடும்பத்தில் இப்போது முன்னிலைப்படுத்தப்படக்கூடியவர் நாமல் ராஜபக்ச மட்டுமே. எனினும் இந்த தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து ஒருவரை நியமிக்க அவர்கள் விரும்பமாட்டார்கள்.
இப்போது சிங்கள தேசத்தில் எழுந்திருக்கின்ற நெருக்கடியை, நெருப்பாற்றை கடப்பதற்கு ரணில் என்ற உடைந்த வள்ளத்தை பயன்படுத்தி கடந்த பின்னர் நாமலை தலைவனாக்குவதுதான் மகிந்த ராஜபக்சவின் அந்திமக்கால இலக்காகும்.
இன்னும் ஒரு வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் நிலையில் ராஜபக்சாக்கள் எடுக்கக்கூடிய வியூகம் என்ன? குறிப்பாக மகிந்த ராஜபக்சசவின் எதிர்கால அரசியல் வியூகம் என்ன என்பது பற்றி சற்று விரிவாக அவதானிக்க வேண்டியுள்ளது.
இலங்கை அரசியல் போக்கு
இலங்கை அரசியலில் ராஜபக்சக்கள் தவிர்க்க முடியாத சக்தி. 2005இல் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச பெற்ற வெற்றியை சீன ஆதரவு, இந்திய எதிர்ப்பு, தமிழின அழிப்பு என்ற மூன்று கொள்கைகளைக் கடைப்பிடித்ததன் மூலமே பெற்றனர்.
இதன்மூலம் ராஜபக்ச குடும்பம் இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக முன்னிலைக்கு வந்துவிட்டது.
புலிகளையும் தமிழ் மக்களையும் வகை தொகை இன்றி படுகொலை செய்து முள்ளிவாய்க்காலில் பெற்ற இராணுவ வெற்றி சிங்கள தேசத்தில் அவர்களை வெற்றி நாயகர்களாக நிலை நாட்டவும் ஸ்தாபிதமடையவும் செய்தவிட்டது. அதுவே அவர்களை இன்றும் நிலை நிறுத்தியுள்ளது. எதிர்காலத்தும் அதுவே அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
இராணுவ வியூகம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் அடைந்த வெற்றி என்பது கோத்தபாய ராஜபக்சவின் இராணுவ தந்துரோபாயத்தாலோ, இராணுவ வியூகத்தாலோ அடைந்த வெற்றி அல்ல.
தமிழ் மக்களை வகை தொகை இன்றி இனப்படுகொலை செய்ததன் மூலம் பெற்ற வெற்றியாகும்.
வான், கடல், தரையென மும்முனைகளாலும் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அதிகூடிய வெடிபொருள் பயன்பாடும், அதன் மூலம் மக்களை கொன்றளித்தும், படுகாய படுத்தியும், மக்களை இடம்பெயரச் செய்து, விடுதலைப் புலிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, விடுதலைப் புலிகள் ஆயுத தளபாடங்களை நகர்த்த முடியாமல் , மக்களை இடம் பெயரச் செய்ததன் மூலம் விடுதலைப் புலிகள் மீது பெரும் சுமையை சுமத்தி, அந்தச் சுமையை பயன்படுத்தி முள்ளிவாய்க்காலில் புலிகளையும் மக்களையும் இனப்படுகொலை செய்ததன் வாயிலாக பெற்ற வெற்றியே ராஜபக்சகளின் வெற்றியாகும்.
"யுத்த களத்தில் வாள் ஏந்தி யுத்தம் புரிவதற்கான வீரத்தை விடவும் யுத்தகளம் தருகின்ற சுமைகளை தாங்குவதற்கான வீரம் பெரிதாக இருக்க வேண்டும்" என சீனப் போரியல் அறிஞன் சன்ஷூ குறிப்பிடுவது போர்க்களம் தருகின்ற சுமையை தாங்குவதற்கான தந்திரோபாயம் மிக்கவனே நிலையான வெற்றி பெற்றவன் ஆகிறான்.
இங்கே போர்க்களத்தில் யுத்தம் தருகின்ற சுமையைத் தாங்குவது என்பது தமிழர்களுடைய போராட்டத்திற்கு பொருந்தும்.
போரின் பின்னே ஏற்படும் நிலைமைகளை கையாள்வது ராஜபக்சங்களுக்கும் பொருந்துகிறது. போர்க்களத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, படுகாயம், பட்டினி, இடப்பெயர்வு தந்த துன்பங்களும் வலிகளும் இணைந்து மக்களால் மக்கள் முடக்கப்பட்டார்கள்.
மக்கள் முடக்கப்பட்டதனால் புலிகள் முடக்கப்பட்டார்கள். இந்த மக்களின் சுமையை , வலியை தாங்க முடியாமையினால் போர்க்களத்தில் புலிகள் விழுந்தார்கள்.போர் வெற்றியின் பின்னர் ஏற்படுகின்ற கட்டுக்கடங்காத செயல்கள் தருகின்ற சுமையை தாங்க முடியாமல் கையாளத் தெரியாமல் கோத்தபாயாக ராஜபக்ச விழுந்தார் என்பதையுமே இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
பொருளாதார நெருக்கடி
மஹிந்த ராஜபக்ச ஸ்தாபித்த குடும்ப வெற்றியே அவருடைய தம்பி கோட்டபாய ராஜபக்சேவை ஜனாதிபதி ஆக்கியது.
இதனால் அவர் மூலம் சிங்கள தேசத்தின் வெற்றி நாயகர் பிம்பம் எழுந்தது. வெற்றி தந்த இறுமாப்பில் தமிழ் மக்களைக் கொன்றொழித்து, வதைத்து ருசி கண்ட கோட்டபய சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தில் கைவைத்து இவர்கள் மேற்கொண்ட ஊழல்கள் இலங்கையை பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்தது.
ஏற்கனவே முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழ் மக்கள் வகை தொகை இன்றி கொல்லப்பட்டமை, சர்வதேச ரீதியில் மனித குலத்துக்கு எதிரான குற்றம், போர்க் குற்றம், இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டுக்கள் மனித உரிமை அமைப்புகளினாலும் மனித உரிமை ஆர்வலர்களுனாலும் வலுவாக முன்வைக்கப்பட்டு ஐநா சபை வரை கொண்டு செல்லப்பட்டு விட்டது.
இத்தகைய குற்றங்களுக்கு முகம் கொடுத்து, சீனச் சார்பு வெளியுறவு கொள்கையை கடைப்பிடித்து ஆட்சி கட்டில் ஏறிய கோத்தபாயாவினால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போய்விட்டது.
பொருளாதார நெருக்கடியினால் மேற்குலக அரச அனுசரணையுடன் ஒரு தொகுதி சிங்கள மக்கள் கிளர்ந்து எழுந்து மேற்கொண்ட "அறகலையப்" போராட்டத்தின் முன் யுத்த வெற்றிவீரன் என்று சொல்லப்பட்ட கோட்டபாய நின்று பிடிக்க முடியவில்லை.
இதிலிருந்து கோட்டபயா ஒரு சிறந்த இராணுவ வீரனும் அல்ல, இராணுவ நிபுணனுமல்ல, இராணுவ தந்துரோபாயவாதியோ அல்ல என்பது நிரூபணமாகியது.
அவர் இராணுவ நிபுணத்துவம் பெற்றவர் என்றால் அறகலையப் போராட்டத்தை ஒரு சில நாட்களுக்குள்ளேயே முடக்கி வெற்றி கொண்டிருக்க முடியும்.
சொந்த மக்களின் சலசலப்பை சமாளிக்க முடியாமல் பதவியைத் துறந்து தப்பி ஓடினார். இதன் மூலம் வெற்றி நாயகர் என்ற பிம்பம் சிங்கள தேசத்தில் உடைக்கப்பட்டு விட்டது.
யுத்தத்தை பயன்படுத்தி யுத்தத்திற்காக பெரும் செலவு செய்கிறோம் என்ற போர்வையில் தங்களுடைய குடும்பங்களுக்கான வெளிநாட்டு முதலீடுகளை செய்தார்கள். உள்ளூரில் பெரும் முதலாளிகளுடைய செல்வங்களை சூறையாடினார்கள்.
சிங்கள பௌத்த மயமாக்கல்
பெரும் நிறுவனங்களை கையகப்படுத்தினார்கள் என்ற பெரும் ஊழல் பட்டியல் ஒன்று இப்போது சிங்கள மக்கள் மத்தியில் கிடைத்துவிட்டது.
நாட்டை கொள்ளையடித்த திருடர்கள் என்ற பெயர் ராஜபக்சக்களுகு கிடைத்தாங்கூட இந்தப் பெயர் உள்ளூர் அரசியல் கட்சி மட்டத்திலேயே பேசப்படும்.
இதனை முறியடிப்பதற்கு தமிழின எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு போன்ற கவசங்கள் ராஜபக்சக்களுக்கு எப்போதும் துணை புரியும்.
வெற்றி நாயகர் பிம்பம் உடைக்கப்பட்டாலுங்கூட இன்றும் ராஜபக்சக்கள்தான் சிங்கள தேசத்தின் பலம் மிக்க தலைவர்கள் என்ற நிலை மாறவில்லை.
ராஜபக்சேக்கள் புலிகளை அழித்து நாட்டை ஒன்றாக்கினார்கள் என்றும், இந்திய எதிர்ப்பை தொடர்ந்தும் கடைபிடிக்கிறார்கள் என்ற வகையிலும் மகாசங்கத்தினரிடமும், இராணுவத்தின் மத்தியிலும், சிங்கள இனவாத தலைவர்கள் மத்தியிலும், சிங்கள இனவாதிகள் மத்தியிலும், சிங்கள ஊடகங்கள் மத்தியிலும் எப்போதும் ஒரு நிலையான இடம் உண்டு.
ஆதலால் இலங்கை அரசியலில் தொடர்ந்து குடும்ப ஆதிக்கத்தை பேணக்கூடிய குடும்பமாக ராஜபக்ச குடும்பமே தொடர்ந்து இருக்கும்.
ஜனாதிபதி வேட்பாளர் பதவி
எனவே இப்போது உள்ள பொருளாதார நெருக்கடி, சர்வதேச அழுத்தம், பிராந்திய அழுத்தம் என்பவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டுமானால் உடனடியாக வரப் போகும் ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சக்களின் குடும்பத்திலிருந்து ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியாது.
எனவே ஏற்படுகின்ற தற்காலிக நெருக்கடியை கடந்து செல்வதற்கு பொருத்தமான, பாதுகாப்பான, நம்பிக்கையான, உயர் குழாத்தைச் சேர்ந்த ஒரு தலைவராக ரணிலே மகிந்த ராஜபக்சவின் தெரிவாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக ராஜபக்சக்களினால் சிம்மாசனத்தில் அமர்த்தபட்டவர்.
எனவே அவர் ராஜபக்சகளுக்காகத்தான் சேவகம் செய்வார். அத்தோடு சிங்கள உயர் குழாத்தின் தலைமைத்துவத்தை தாழ்த்தப்பட்டவரிடம் கையளிக்கவும் ரணில் விரும்பமாட்டார்.
அதனால்தான் சஜித் பிரேமதாசாவை தூக்கி எறிந்து ஓரங்கட்டி ராஜபக்சக்களின் பின்னால் நிற்கிறார். இப்போது மகிந்தவின் இலக்கு தன்னுடைய மரணத்திற்கு முன்னர் தனது மகன் நாமல் ராஜபக்சேவை சிம்மாசனத்தில் அமர்த்துவதுதான்.
ராஜபக்சர்களின் ஆட்சி திட்டம்
ராஜபக்ச குடும்பம் வெளி அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுபவர்.
வெளித்தோற்றத்தில் ராஜபக்ச சகோதரர்கள் மிக வலுவாகவும் இறுக்கமாகவும் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தோன்றக்கூடும்.
ஆனால் அரசியல் அதிகாரம் என்று வந்துவிட்டால் உள்ளுக்குள் அவர்கள் பலமாக மோதி தங்கள் பங்கை பெறுவதிலும் அதிகாரத்தை பெறுவதிலும் மோதிக் கொண்டுதான் இருப்பார்கள்.
இது உலகளாவிய அரசியலிலும்சரி பண்டைய மன்னர் ஆட்சிக்கால வரலாற்றிலும்சரி அதிகாரத்துக்கு பின்தான் தந்தையும், தனியனும் என்பதை இலங்கை அரசியலில் தாதுசேனன், காசியப்பன் போன்ற மன்னர்களுடைய வரலாற்றிலும் உள்ள பதவி, அதிகாரம் என்பவற்றுக்கான பாடமாகும். ராஜபக்ச குடும்பத்தில் மகிந்த தன்னுடைய மகன் நாமலை ஜனாதிபதி ஆக்குவதுதான் மகிந்தவின் திட்டம்.
அடுத்த தேர்தலில் தன்னுடைய சகோதரர்கள் யாரையாவது நிறுத்தினால் அவருடைய ஆட்சி காலத்துக்கு பின் தன்னுடைய சகோதரனுடைய வாரிசுகள்தான் எதிர்கால இலங்கையின் சிம்மாசனத்தில் அமர முடியும். ரணில் ஆட்சி கலை எனவே தன்னுடைய நேரடி வாரிசான நாமலையே தலைவனாக்க மகிந்த விரும்புவார்.
ஆனாலும் அந்த இலக்கை அடைவதற்கு இன்றைய அரசியல் சூழலில் பெரும் தடைகள் இருப்பதனால் இந்தத் தடைகளை தாண்டுவதற்கான ஒரு கால அவகாசம் மகிந்தவுக்கு தேவைப்படுகிறது.அந்தக் இடைக் காலத்துக்கு குறை நிரப்பியாக இப்போது பொருத்தமானவராக ரணில் இருக்கிறார்.
ஏனெனில் ரணில் ஆட்சி கலை தெரிந்த, ஆனால் அரசியல் பலமற்ற, அரசியல் வாரிசுவற்ற மனிதர் மட்டுமல்ல அவர் ஜனாதிபதியாக இருக்கும் போதே மரணிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளவர்.
எனவே இந்த நெருக்கடியான காலத்தைக் கடப்பதற்கு ரணிலை பயன்படுத்தி நெருக்கடிகளை தீர்த்து கடந்து பொருத்தமான நேரத்திற்காக காத்திருந்து தன்னுடைய மகன் நாமலை சிங்களத்தின் சிம்மாசனத்தில் அமர்த்துவதுதான் மகிந்தவின் ராஜதந்திர உத்தியாக அமையும்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் சார்பில் மகிந்தாவினால் ரணில் பொது வேட்பாளராக நியமிக்கப்படுவார். அதுவே ராஜபக்ச தனது வாரிசுவை சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கான கால அவகாசத்தையும் கொடுக்கும்.
இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்ற பெரும்பான்மை உறுப்பினர்கள் ராஜபக்சர்களின் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல அவர்கள் இனவாதத்தின் பெயரால் பதவிக்கு வந்தவர்கள்.
எனவே அவர்கள் இனவாதத்தின் பேராலும் ராஜபக்சக்களின் பின்னால் நிற்பதன் மூலமே தொடர்ந்து பதவியை தக்க வைக்க முடியும்.
அவ்வாறு தக்க வைப்பதற்கு ரணிலையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு அவருக்கு பின்னே நிற்பதுதான் அவர்களுக்கு பயனைத் தரவல்லது.
சீனாவின் இராஜதந்திர நடவடிக்கை
இவர்கள் எதிர்வரும் தேர்தலில் ரணிலுக்காகவே உழைப்பர் அத்தோடு ரணில் மேற்குலகத்தால் விரும்பப்படும் அரசியல் தலைவரும்கூட மற்றும் ரணிலினால் இந்தியாவையும் தடவி கையாள முடியும்.
மறுபக்கம் சீனாவுடன் பின் கதவால் கைகோர்த்து அரவணைக்கும் தந்திரமும் தெரிந்தவர். சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை அரசியலில் ராஜபக்சக்களின் குடும்பம் எத்தகைய கொடுங்கோளர்களாக இருந்தாலும் அவர்களே சீனாவின் முதன்நிலை நண்பர்கள்.
ராஜபக்சக்களுக்கும் சீனாவே உற்ற நண்பன். சீனாவின் சதி நடவடிக்கையின் மூலம் 2005 தேர்தலில் மஹிந்த ராஜபக்சவால் ஜனாதிபதியாக முடிந்தது.
எனவே ராஜபக்ச அவர்களுடைய கட்சிக்கு எப்போதும் சீன ஆதரவு உண்டு. அவர்களைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் தக்கவைத்திருக்க வேண்டிய தேவையும் சீனாவுக்கு உண்டு.
ஏற்கனவே அம்பாந்தோட்டைத துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்ததன் மூலம் சீனா இலங்கையின் நிலையான நண்பன் என்ற நிலையை எய்திவிட்டது.
சிம்மாசான முடிவுரிமை
எனவே இந்த நட்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுதான் இலங்கை அரசியலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச உறவுகளை அவரவர் தகுதிக்கும், பெறுமானத்துக்கும், காலச் சூழ்நிலைமைக்கு ஏற்றவாறு சிங்கள இராஜதந்திரம் கையாளும்.
இத்தகைய மேற்குலக - சீன - இந்திய அணிகள் இலங்கைத் தீவிலும், இந்து சமுத்திர பிராந்தியத்திலும் தமது ஆதிக்கத்தை பெறுவதற்கு முட்டி மோதும் களமாகவும் அடுத்து வருகின்ற வருடங்கள் மாறும்.
எனவே இத்தகைய பெரும் சவால்கள் நிறைந்த வருடங்களில் தமிழ அரசியல் தரப்புகள் தங்கள் அரசியலை நிர்ணயம் செய்யக்கூடிய வழி வகைகளை செய்யாது வெறும் தள்ளுமுள்ளு, வாக்குவாத அரசியல் நாடகங்களில் ஈடுபட்டிருப்பது தமிழினத்தை படுபாதாளத்தில் தள்ளிவிடும்.
எனவே இப்போது மகிந்த ராஜபக்ச இந்திய- மேற்குலகத்தையும், சீனாவையும் கையாண்டு ரணில் விக்கிரமசிங்காவை ஜனாதிபதியாக்குவதன் மூலம் பொருத்தமான காலம் வரைக்கும் காத்திருந்து தனது மகன் நாமலை சிம்மாசனம் ஏற்றுவதற்காக காத்திருக்கிறார்.
இத்தகைய காத்திருப்பானது வயது முதிர்ந்துள்ள ரணில் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியாகி பதவிக் காலம் முடியும் முன்னர் இறப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
அவ்வாறு சிலவேளை ரணில் விக்ரமசிங்க பதவியில் இருக்கும் போதே மரணம் அடைந்தால் குறை நிரப்புகால ஜனாதிபதியாக நாமல் ராஜபக்ச அவர்களே சிங்களத்தின் சிம்மாசனத்தில் அமர்வார் என்பது நிச்சயம்.