அநுர அரசின் லட்சணத்தை வீதிக்குச் சென்று மக்களிடமே கேளுங்கள்..! சூட்சுமமாக பதிலளித்த மகிந்த
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் லட்சணங்கள் குறித்துத் தான் ஊடகங்களுக்குச் சொல்வதை விட, ஊடகவியலாளர்கள் நேரடியாக வீதிக்குச் சென்று மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டம் நேற்று(05.06.2026) பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி
இதன் மூலம் தற்போதைய நாட்டின் நிலைமை குறித்து மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகின்றது என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

கட்சியின் உள்ளக கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறதா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, கட்சியில் தற்போதைக்கு எந்தவித மாற்றங்களும் இல்லை. எனினும், கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகள் குறித்தே இந்தச் செயற்குழு கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது" என அவர் தெளிவுபடுத்தினார்.
தேர்தல் கள முடிவுகளில் மக்களின் நிலைப்பாடு
அரசியல் களத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தரப்பும், சஜித் பிரேமதாஸவின் தரப்பும் வெவ்வேறு உத்திகளுடனும், புதிய 'மூளைகளுடனும்' புதிய கூட்டணிகளை அமைப்பதற்குத் தயாராகி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
எந்தத் தரப்பு எந்த உத்தியைப் பயன்படுத்திப் புதிய கூட்டணிகளை அமைத்தாலும் அல்லது மாற்றங்களைச் செய்தாலும், அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்றார்.

இறுதியாக, தேர்தல் காலத்தில் மக்கள் வாக்களிக்கும் போது எவற்றைக் கருத்தில் கொள்வார்கள் என்பது குறித்துப் பேசிய மகிந்த ராஜபக்ச, மக்கள் எப்போதும் நாட்டின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குவார்கள். அதேபோன்று, நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையும் சிந்திப்பார்கள்.
அத்துடன், தற்போதைய நிகழ்காலச் சூழலையும் மிகத் தெளிவாகக் கருத்தில் கொண்டே மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள்.
எனவே, இந்த முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே மக்கள் தேர்தல் காலத்தில் சரியான முடிவை எடுப்பார்கள் என்றார்.