ஹந்துன்நெத்தி எழுதிக்கொடுத்த நாமலின் அரசியல் மேடைப்பேச்சு! கைவிட்டார் மகிந்த
எனது முதல் அரசியல் மேடைப்பேச்சை எழுதி கொடுத்தவர் புதிய அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் சுனில் ஹந்துன்நெத்தி அண்ணன். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது கெஸ்பேவ பிரசாரக் கூட்டத்திற்காக அவர் எழுதி கொடுத்ததையே நான் பேசினேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யூடியூப் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மகிந்தவிடம் இருந்து பிரிந்த சகாக்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எனது தந்தையுடன் மிக நெருக்கமாக அரசியலில் ஈடுபட்டவர் தான் மைத்திரிபால சிறிசேன மற்றும் டளஸ் அழகபெரும ஆகியோர்.
அவர்கள் பிரிந்து சென்று, பின்னர் மகிந்தவின் அரசியல் வாழ்க்கையை அவரின் மகன்கள் நாசப்படுத்தினர் என்று குற்றம்சாட்டினர். அவர்கள் பிரிந்து சென்றதற்கான அரசியல் காரணமாக, மகிந்த ராஜபக்சவின் பிள்ளைகளான எங்களை குற்றம் சாட்டினர்.
ஆனால் எங்கள் குடும்பத்தில் அப்படியொன்றும் இல்லை. நாங்கள் எப்போதும் போல் ஒற்றுமையாகவே செயற்படுகிறோம். இன்று என் தந்தையிடம் நாமலை பற்றி கோட்டால், 'அவனை, நான் கைவிட்டுவிட்டேன்' என்றே கூறுவார். ஏனென்றால் அரசியலை நான் தனியாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை என்னுடைய தந்தைக்கு உள்ளது.
எங்களைப் பற்றி குறை கூறுபவர்கள், எங்களை நன்கறியாதவர்களேயாவர். ஆனால் நூறுவீதம் அரசியலில் எங்களிடம் குறை இல்லை என்று நான் சொல்லவில்லை.
நாடாளுமன்றத்தில் அநேகமானோர் தங்களின் தந்தையின் வழியில் வந்தவர்களேயாவர். நான் என் தந்தையின் வாக்குப் பலத்திலேயே நாடாளுமன்றம் சென்றேன். அதை தக்கவைத்து கொள்வதில் தான் எனது திறமை உள்ளது.
எமது நாட்டின் அரசியலில், அரசியல் தலைவர்களின் உணர்வு ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்தும் குடும்ப உறுப்பினர்களுக்கே குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
கடந்த அரசாங்கத்தில் எனது தம்பியை சிறையில் அடைத்தனர். அது எனது தந்தையை உணர்வுபூர்வமாக தாக்கியது என குறிப்பிட்டுள்ளார்.



