ஜூலி சாங்ங்குடன் மகிந்த சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்குக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த 4 வருடங்களாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகச் செயற்படும் ஜூலி சாங், எதிர்வரும் 16 ஆம் திகதி தாயகம் திரும்புகின்றார்.
தனது இராஜதந்திரப் பணியை முடித்துக்கொண்டு திரும்பும் அவர், கடந்த சில நாட்களாக முக்கியத்துவமிக்க சந்திப்புகளைக் கொழும்பில் நடத்தி வருகின்றார்.
அமெரிக்காவின் இராஜதந்திர அழுத்தங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவர் நேற்று பேச்சு நடத்தினார். இதன்போது, "அமெரிக்க - இலங்கை கூட்டாண்மை குறித்து விவாதித்தோம்." - என்று அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற மக்கள் புரட்சியின்போது (அரகலய) ஜூலி சாங்தான் அமெரிக்கத் தூதுவராகச் செயற்பட்டார்.
அப்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவும், மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் பதவி வகித்தனர். அரகலயவின் பின்னணியில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்கும் இருந்தார் என மகிந்தவின் சகாக்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் மற்றும் சர்வதேச களத்தில் அமெரிக்கா கடும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தது.
மறுபுறத்தில் பசில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு அமெரிக்கக் குடியுரிமை இருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்காக அமெரிக்கக் குடியுரிமையை கோட்டாபய ராஜபக்ச துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


