பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியாது! சட்டச் சிக்கலுக்குத் தீர்வு கண்டதும் தேர்தல் என தகவல்
2017ஆம் ஆண்டில் பழைய தேர்தல் முறைமை குறித்துக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோருவது முரண்பாடானது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹா பகுதியில் நேற்று (13.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோருகின்றார்கள்.
ஆனால், 2017ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அமைச்சுப் பதவி வகித்த நல்லாட்சி அரசுதான் மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது.

அன்றைக்கு அந்தப் பழைய தேர்தல் முறைமை குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே முறைமையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என்கின்றார்கள்.
முறையற்றதொரு அரச நிர்வாகம்
முறையற்ற மற்றும் மோசடியான பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அது முறையற்றதொரு அரச நிர்வாகமே தோற்றம் பெற வழிவகுக்கும்.
எனவே, தேர்தல் முறைமையில் உள்ள சட்டச் சிக்கல்களுக்கு முரண்பாடற்ற வகையில் முறையான தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றார்.