தென்னிலங்கை அரசியலில் மகிந்தவின் பரிதாப நிலை
கடந்த சில நாட்களாக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்கள் காரணமாக இந்த வார நாடாளுமன்ற அமர்வுகள் மிகவும் சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சில மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் தனி வேட்பாளரை முன்னிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்ததன் மூலம், நாடாளுமன்றத்தின் அதிகார சமநிலையும் மாறி, ஆளும் கட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
தனிப் பெரும்பான்மை
இதன் காரணமாக சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மையை பெறுவது எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக அரசாங்கத்தின் ஆதரவுடன் 117 உறுப்பினர்கள் இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணிக்கை நூறுக்கு கீழ் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொது சட்டமூலத்தை நிறைவேற்ற தேவையான 113 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மையை இழந்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதி நெருங்கி வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுகளை பெறுவதற்கான கலந்துரையாடல்களை அந்தந்த அரசியல் கட்சிகள் மிகவும் பலமாக ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்தவின் நிலை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்காமல் தனி வேட்பாளரை முன்னிறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதால் எதிர்வரும் காலங்களில் மகிந்த ராஜபக்சவும், நாமல் ராஜபக்சவும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆதரித்து வந்த இக்குழுவினர் தனி வேட்பாளரை முன்னிறுத்துவதை ஆதரிக்கும் போது இயல்பாகவே எதிர்கட்சியின் பாத்திரத்தை வகிக்கும் குழுவாக மாறிவிடுவார்கள்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 15ஆம் திகதி கோரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.