ஹரினுக்கு பதிலாக விளையாட்டுத்துறை அமைச்சை மேற்பார்வையிடும் மகேசன்
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) கடந்த வெள்ளிக்கிழமை பதவி விலகல் செய்ததை அடுத்து விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் அன்றாட நடவடிக்கைகளை அதன் செயலாளர் கே.மகேசன் மேற்பார்வையிட உள்ளதாக அமைச்சின் தரப்புகள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குறித்த அமைச்சுப் பதவியை தனது கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் வரை அல்லது விளையாட்டு அமைச்சை வேறு அமைச்சருக்கோ அல்லது தற்போதைய இராஜாங்க அமைச்சருக்கோ வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடும் வரை, அதன் பணிகளை அமைச்சின் செயலாளரே மேற்கொள்வார்.
தகுதி நீக்கம்
அதேநேரம் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திஸாநாயக்க தற்போதைய விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சராக செயற்படுகிறார்.
முன்னதாக, சுற்றுலா மற்றும் காணி அமைச்சுப் பதவிகளையும் வகித்த ஹரின் பெர்னாண்டோ, 12 மாதங்களுக்கு முன்னர் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் கருதியதால் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தனது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய, ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு உத்தரவிடுமாறு கோரி, அமைச்சர் ஹரின் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த போதே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதனையடுத்து 2024, ஆகஸ்ட் 9 முதல் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து பெர்னாண்டோ தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |