டெல்லி கேப்பிடல்ஸ் அணி மஹேலவிற்கு வழங்கிய புதிய பதவி
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் நடைபெறும் பல்வேறு லீக் தொடர்களிலும் அவ்வணியின் கிரிக்கெட் செயற்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இணை உரிமையாளர்களான 'ஜி.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் வெள்ளிக்கிழமை (20) இந்த நியமனத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

அதற்கமைய, இந்தியன் பிரீமியர் லீக், மகளிர் பிரீமியர் லீக், சர்வதேச லீக் டி20, மேஜர் லீக் கிரிக்கெட் மற்றும் 'தி ஹன்ட்ரட்' ஆகிய தொடர்களில் பங்கேற்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளின் செயற்பாடுகளை மஹேல ஜயவர்தன வழிநடத்தவுள்ளார்.
அத்துடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் போட்டியிடும் டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராகவும் அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
மஹேலவின் வருகை அணிக்கு மேலதிக அனுபவத்தையும், குறிப்பாக மகளிர் கிரிக்கெட் கட்டமைப்பிற்குச் சிறந்த மூலோபாயத் தலைமையையும் வழங்கும் என டெல்லி கேப்பிடல்ஸ் இணை உரிமையாளரும் ஜி.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் தலைவருமான கிரண் குமார் கிரந்தி குறிப்பிட்டார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஏற்கனவே கட்டியெழுப்பப்பட்டுள்ள அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி, தொடர்ச்சியாகக் கிண்ணத்தை வெல்லக்கூடிய பலமான அணியை உருவாக்குவதே தமது இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.
நவீன கிரிக்கெட் பற்றிய மஹேல ஜயவர்தனவின் புரிதலும், போட்டித்தன்மை மிக்க அணிகளைக் கட்டியெழுப்பிய அவரது அனுபவமும் டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவும் என கிரண் குமார் கிரந்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக 2026 ஐ.பி.எல் தொடர் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராகப் பணியாற்றிய மஹேல ஜயவர்தன, அதன் பின்னர் அவ்வணியிலிருந்து விலகியிருந்தார். சுவாரசியமான விடயம் என்னவென்றால், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஐ.பி.எல் தொடரில் ஒரு வீரராக மஹேல ஜயவர்தன இறுதியாகப் பிரதிநிதித்துவப்படுத்திய அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri