மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு (Photos)
மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு இன்று நாட்டில் பல இடங்களில் மகாத்மா காந்தியின் சிரார்த்த தினம் நினைவு கூரப்பட்டது.
மட்டக்களப்பு
மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவு தூபியில் இன்று (30) காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஹரி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.எல்.முஹம்மது மீராஸாஹிப் அவர்களின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணப் பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது தற்போதைய கோவிட் சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறைந்தளவிலானோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதன், வர்த்தக சங்க பிரிதிநிதிகள் உட்பட சென்.ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.எல்.முஹம்மது மீராஸாஹிப் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
செய்திகள் : ருசாத்
யாழ்ப்பாணம்
அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 74 ஆவது சிரார்த்த தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
யாழ் போதனா வைத்திய சாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரனால் இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மகாத்மா காந்தியின் 74 வது சிரார்த்த தின நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், க வி விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.








