மகா சிவராத்திரியை முன்னிட்டு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்
இந்துக்களின் மிக முக்கியத்துவம் மிக்கதாகவும் அற்புதம் கொண்டதாக கருதப்படும் மகா சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் வழிபாடுகள், மகா யாகங்கள் என்பன நடைபெற்று வருகின்றன.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டில் ஏற்பட்டுள்ள கஸ்ட நிலைமைகள் நீங்கவும் நாடும் அரசும் சிறக்கவும் உலகை ஆட்டுவிக்கும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து பாதுகாக்க வேண்டியும் ஆலயத்தில் மந்திரகல்ப்ப மகா யாகம் நடாத்தப்பட்டது.
அந்த யாகத்தின் இறுதி நாளான மகா சிவராத்திரி தினமான இன்று (18.02.2023) அதிகாலை விசேட பூஜைகள் மற்றும் மஹா யாகம் நடைபெற்றன.
மந்திரகல்ப்ப மஹா யாகம்
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையிலான
சிவாச்சாரியர்களினால் இந்த மகா யாகம் நடாத்தப்பட்டதுடன் 108 மூலிகைளுக்கு
மேற்பட்ட மூலிகைகள் கொண்டு இன்றைய தினம் மந்திரகல்ப்ப மகா யாகம்
நடாத்தப்பட்டது.
இதன்போது மூலமூர்த்தியாகிய மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டது.
அடியார்களும் இன்றைய தினம் மூலிகைகளைக் கொண்டு மந்திரகல்ப்ப மகா யாகத்தினை நடாத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
யாகத்தினை தொடர்ந்து விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று மாமாங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளும் நடாத்தப்பட்டது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாடுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.