வடக்கில் ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற மகா சிவராத்திரி பூஜைகள்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - நாவற்குழி சிவ பூமி திருவாசக அரண்மனையில் மகா சிவராத்திரி தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
திருவாசக அரண்மனையில் வீற்றிருக்கும் "சிவ தட்சிணாமூர்த்தி" பெருமானை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருவாசக அரண்மனையில் அமைந்துள்ள 108 லிங்கங்களுக்கு அடியவர்கள் நீரூற்றி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிய வண்ணமுள்ளனர்.
உலகம் முழுவதும் இந்துக்களால் மகா சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள பல இந்து ஆலயங்களிலும் சிவராத்திரி தின நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒட்டுசுட்டான் தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி மிக பக்தி பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
மகா சிவராத்திரி நாளான இன்றைய தினம் (08.03.2024) மாலை 6 மணிக்கு விசேட 108 சங்காபிஷேகம் இடம்பெற்று ஏழு மணியளவில் முதலாம் ஜாம பூஜை இடம்பெற்றது.
சிவராத்திரி நிகழ்வு
அத்துடன் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம சிவாச்சாரியார் ர.கீர்த்திவாசக்குருக்கள் அவர்களது தலைமையில் பூஜைகள் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நான்கு சாம பூஜைகள் இடம் பெறவுள்ளது.
இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானை வழிபட்டு வருகின்றமையுடன் ஆலய வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றவண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இன்று(09) காலை நான்காம் ஜாம அபிசேக பூஜைகளை தொடர்ந்து பூலோகநாயகி சமேத வேகாவனேஸ்வர பெருமான் உள்வீதி வெளி வீதி வலம் வரும் அருள்காட்சி இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |