கனடாவில் கொல்லப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் நகர மேயர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
ஒட்டாவாவின் பார்ஹேவனில் கொல்லப்பட்ட ஆறு இலங்கைப் பிரஜைகளுக்காக நகர மேயர் மார்க் சுட்கிப் நகர மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
நேற்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்காக நகர மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார். இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தின மாகாண நிகழ்வில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நகரின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் தங்களினால் முடிந்த வகையில் ஏதேனும் ஓர் முறையில் உயிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு உதவுமாறும் கோரியுள்ளார்.
பெரும் துயரம்
ஒட்டாவா நகரம் மிகவும் பாதுகாப்பான நகரம் எனவும் இது ஓர் அரிய சம்பவம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தினால் நகர மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார். தந்தையாகவும், நகரின் மேயராகவும் சிறுவர்களின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த நாள் தமக்கு மிகவும் சவால் மிக்க நாளாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளைகளின் தந்தையை நினைத்து வெகுவாக கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.
அஞ்சலி நிகழ்வுகளை
அவருக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்பது தம்ககு தெரியவில்லை என நகர மேயர் தெரிவித்துள்ளார். ஒட்டவாவா இலங்கை சமூகத்தினர் உள்ளிட்ட ஏனைய மக்கள் இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பரிபூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டமென வலியுறுத்தியுள்ளார்.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மௌன அஞ்சலிகள் அல்லது வேறும் வழிகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி நிகழ்வுகளை நடத்துமாறு அவர் நகர மக்களிடம் கோரியுள்ளார்.
அயலவர்கள், குறித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்க நேரிட்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.