மதுகம பிரதேச சபைத் தலைவருக்கு அநாமதேய அழைப்பில் கப்பம் கோரல் - உயிருக்கும் அச்சுறுத்தல்
மதுகம பிரதேச சபைத் தலைவரிடம் அடையாளம் தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து மேற்கொள்ள்ப்பட்ட அழைப்பொன்றின் மூலம் கப்பம் கோரப்பட்டுள்ளது.
மதுகம பிரதேச சபையின் தலைவர் கசுன் முனசிங்கவுக்கு அடையாளம் தெரியாத அநாமதேய தொலைபேசி எண்ணிலிருந்து கடந்த 07ஆம் திகதி காலை வந்த அழைப்பொன்றில், ஐந்து இலட்சம் ரூபா கப்பத் தொகை கோரப்பட்டுள்ளது.
அதனைச் செலுத்தாவிட்டால் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அவரை மீண்டும் அமரவிடப்போவதில்லை என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கசுன் முனசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, நேற்று காலை அவர் வீட்டில் இருந்தபோது, அவரது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதில் ஒரு குறிப்பிட்ட நபர் அவரிடம் ஐந்து லட்சம் கோரியதாகவும், அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தனக்குப் பணம் அவசரமாகத் தேவைப்படுவதாகவும், அதன்படி, தற்போது சிறையில் உள்ள ஒருவரைச் சந்திக்க; செலவ்தற்கு இரண்டு லட்சம் ரூபா மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், மீதமுள்ள ரூன்று லட்சம் ரூபா ரொக்கமாகத் தேவை என்றும் கூறப்பட்டதாகத் தெரிவித்தார்.
தொலைபேசி அழைப்பு
கசுன் முனசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக ஆயுதங்களுடன் இருவர் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்றும் அந்தத் தொலைபேசி அழைப்பில் மேலும் கூறப்பட்டது. மீட்புத்தொகை செலுத்தப்படாவிட்டால், மீண்டும் தலைவர் பதவியில் அமர அனுமதிக்கப்பட மாட்டேன் என்றும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.

பின்னர், மதுகம நகரத்தில் உள்ள ஒரு இடத்திற்கு வருமாறு அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் அந்த இடத்திற்குச் சென்றபோது அங்கு யாரும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்னும் சிந்தித்து வருவதாகவும், எவிரைவில் பொலிசில் முறைப்பாடு மேற்கொள்ள உள்ளதாகவும் கசுன் முனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஒரு சுயாதீனக் குழுவின் சார்பில் மதுகம பிரதேச சபையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கசுன் முனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அந்த சுயாதீனக் குழுவின் பிற உறுப்பினர்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி, மதுகம பிரதேச சபையின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.