மடு ஆலய திருவிழாவில் பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி
பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் இவ்வருடம் மடு திருத்தல ஆவணி திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் குறித்த விழாவில் ஏழு இலட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அண்மையில் தெரிவித்திருந்தார்.
திருவிழா திருப்பலி
மடு திருத்தல ஆவணி திருவிழா இம்மாதம் ஆகஸ்ட் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்நிலையில் இன்றையதினம்(15.08.2023) 6.15 மணிக்கு பரிசுத்த பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் மரியன்னையின் விண்ணேற்பு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
மேலும், மடு திருத்தல ஆவணி திருவிழாவில் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.