'வி.டி.தர்மலிங்கபுரம்' என மாறும் மடக்கும்புர வீடமைப்பு திட்டம்.
நுவரெலியா மாவட்டம் வட்டகொட, மடகொம்பரை, புதுக்காடு பிரிவில் இந்திய - இலங்கை அரசுகளின் இணைந்த அபிவிருத்தித் திட்டமாக நல்லாட்சி காலத்தில் அமையப் பெற்ற 'இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு மலையகக் கல்வியாளர் அமரர் வி.டி.தர்மலிங்கம் நினைவாக 'வி.டி.தர்மலிங்கபுரம்' என பெயர் சூட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வு, எதிர்வரும் ஞாயிறு (16.06.2024) அன்று பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது.
மடகொம்பரை புதுக்காடு தோட்டத்தில் பிறந்து ஒரு கல்வியாளராக உயர்ந்து தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக பணியாற்றி அரசியல் செயற்பாட்டாளராக மலையக மக்கள் முன்னணியின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராக உபலைவராகத் திகழ்ந்த எழுத்தாளர் வி.டி.தர்மலிங்கம் பெயரைச் சூட்டுவதற்கு ஊர் மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தர்மலிங்கம் நூலகம்
முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் செயலாளர் நாயகமும் இலக்கியவாதியுமான மு.சிவலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
மேலும் வி.டி.தர்மலிங்கம் மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் (1995) அவரது நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட V.T தர்மலிங்கம் நூலகத்தையும் புனரமைப்பு செய்யவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |