விடுதலைப்புலிகளின் சின்னங்களை பயன்படுத்துவோர் சிறையில் அடைக்கப்படுவார்கள்: நீதி அமைச்சர்
போரில் உயிரிழந்த உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்தும் போது அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், நினைவேந்தல் என்ற பெயரில் தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துபவர்கள், தமிழீழ விடுதலைப்புலிகள் மாதிரிக் காட்சியளிப்பவர்கள், பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது. சட்டம் தன் கடமைமையச் செய்யும். நீதிமன்றம் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாகச் செயற்படும்.
எனவே தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்பதை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.