நான்காவது நாளாக தொடரும் மாவீரர் நினைவேந்தல்! தமிழர் பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு , ஒட்டிசுட்டான், கரைதுறைப்பற்று ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 500 ற்கு மேற்பட்ட மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(24.11.2026) கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் ஞானதாஸ் யூட்சனின் ஏற்பாட்டில் முள்ளியவளையில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
மாவீரர்களுக்கு அஞ்சலி
இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டதனை தொடர்ந்து பொதுச்சுடரினை மாவீரருடைய தந்தையார் செல்லக்குட்டி ஐயா மற்றும் போராளி கர்த்தகன் ஆகியோர் ஏற்றி வைக்க, மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கான மலர் மாலையை போராளிகளான அன்பரசன், முத்தண்ணை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் பவுள்ராஜ் ஆகியோர் அணிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் கலை நிகழ்வுகளும், மாவீரர்களின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன.
இதன்போது கலந்துகொண்ட மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் மதிப்பளிக்கப்பட்டு பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் போசகர் சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்குப் பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று(24.11.2026) காலை 10 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
குடத்தனை வடக்கு மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடைய உறவினர்கள் மங்கள வாத்திய இசையுடன் மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி மரியாதையுடன் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இன்றைய நிகழ்வில் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - எரிமலை