கடற்றொழிலாளர் பிரச்சினையை சாகல இந்தியாவிடம் முன்வைக்க வேண்டும்: தொழிலாளர் சமூகங்கள் கோரிக்கை
"இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதிநிதி சாகல ரத்னாயக்க (Sagala Ratnayaka) கடற்றொழிலாளர்களது பிரச்சினையைப் பற்றி எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை." என அகில இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்ரமணியம் (M.V. Supramaniyam) கவலை வெளியிட்டுள்ளார்.
அவரது இல்லத்தில் இன்றையதினம் (29.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், "தமிழ்நாட்டில் காரைக்கால் பட்டினத்திலே இருக்கின்ற கடற்றொழிலாளர்கள், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு உள்ள தமது கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தினை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தடை செய்யப்பட்ட தொழில்முறை
விடுதலை செய்யாவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக ஒரு அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியா கடற்றொழிலாளர்கள் மனிதாபிமான ரீதியில் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் இங்கே வந்து செய்கின்ற தொழிலானது தடை செய்யப்பட்ட ஒரு தொழில்முறையென அனைவருக்கும் தெரியும். அதையும் மீறி அடாவடித்தனமாக வந்து எமது வளங்களையும் அழித்து, வாழ்வாதாரத்தை சூறையாடி சென்று எமது வயிற்றில் அடிக்கின்றீர்கள், நமது தொழில் முதல்களை அழித்து செல்கின்றீர்கள்.
இந்த தொழிலானது ஒரு கெடுதலான தொழில் என நீங்களும் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள் தெரிவித்திருக்கின்றீர்கள், நீங்களும் அதை ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். இழுவை மடி தொழிலை விட்டுவிட்டு மாற்று தொழிலுக்கு செல்வதாக ஆணித்தரமாக கூறியுள்ளீர்கள். இலங்கையிலுள்ள சட்டத்திற்கு அமைவாகவே உங்களது படகுகள் கைது செய்யப்படுகின்றன.
இந்திய கடற்றொழிலாளர்கள்
இந்த சட்டமானது 1979ஆம் ஆண்டுக்கு முற்பகுதியில் கொண்டுவரப்பட்டது. 1974 - 1976இல் இரண்டு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் போது முதன்முதலாக இலங்கை - இந்திய கடல் எல்லைக்கோடு அடையாளப்படுத்தப்பட்டது.

இதற்கு அனுசரணையாகவே 1979ஆம் ஆண்டு வெளிநாட்டு கடற்றொழில் படகுகள் ஒழுங்குப் பிரமாணம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
உங்களுடன் போராடி, பேச்சுவார்த்தைகள் நடாத்தி எங்களுக்கு எந்த விதமான தீர்வும் எட்டாத நிலையில் தான் ஏறக்குறைய 35 வருடங்களுக்கு பின்னர் 2018ஆம் ஆண்டு நாங்கள் நீதிமன்றத்தை நாடியதால் தான் இன்று இந்த இழுவைமடி படகுகள் கைது செய்யப்படுகின்றன.
முதல் தடவை கைது செய்யப்படுகின்ற கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இரண்டாவது தடவை எல்லை தாண்டிவரும் கடற்றொழிலாளர்களே சிறையில் அடைக்கப்படுகின்றார்கள்.
இது திட்டமிட்டு செய்யப்படுவதில்லை. தொடர்ச்சியாக பயமின்றி அவர்கள் வருவதாலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுகின்றார்கள்.
இழுவைமடி தொழில்
இந்தப் படகுகளை கைது செய்யுமாறு நாங்கள் கடற்படைக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம். அவர்கள் இவ்வாறு கைதுகளை செய்யும்போது அவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதிநிதியான சாகல ரத்னாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்திருக்கின்றார்.

அங்கே, அவர் எமது கடற்றொழிலாளர்களி்ன் பிரச்சினை பற்றி பேசவில்லை. அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சாதகமான விடயங்களை மாத்திரமே பேசுகின்றார் தவிர கடற்றொழிலாளர்களான எமது பிரச்சினையை பற்றி தொட்டுக் கூட பார்க்கவில்லை.
இவ்வாறு நாங்கள் எமது அரசாங்கத்தாலும் இந்தியாவாலும் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கின்றபடியால் தான் இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.உங்கள் மீது இருக்கின்ற வெறுப்பிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியிலோ நாங்கள் இதனை செய்யவில்லை.
எனவே, இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களும் வாழ வேண்டுமாக இருந்தால் இந்த தடை செய்யப்பட்ட இழுவைமடி தொழிலினை உடனடியாக கைவிட வேண்டும் என எமது அமைப்பின் சார்பில் நான் கோரிக்கையை முன்வைக்கின்றேன்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri