காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் பக்கசார்பாக செயற்படும் அரச ஊழியர்கள் - முன்வைக்கப்பட்ட பகிரங்க குற்றச்சாட்டு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் அரச ஊழியர்கள் கூட அரசாங்கத்தை காப்பாற்றும் நோக்கோடு பக்கசார்பாக செயற்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம்(07.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“எங்களுடைய உறவுகளை தேடுவதற்காக இன்றுடன் 2391 நாட்கள் தெருவிலே இருந்து பல இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளோம்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம் தனது பணியை செவ்வனே செய்யவில்லை.
ஜெனிவா கூட்டத்தொடர் வருகின்ற காலப்பகுதியிலே தாங்களும் வேலை செய்கின்றோம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளோடு இணைந்து அவர்களது விபரங்களை திரட்டி அவர்களுக்கான பதிலை அளிக்கிறோம் என காட்டுவதற்காக மும்முரமாக செயல்படுவதாக காட்டிக் கொள்கின்றார்கள்.
நாளையதினம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஓ.எம்.பி அலுவலகம், இந்த பாதிக்கப்பட்ட உறவுகளை அழைத்து அதற்கான தீர்வை வழங்க உள்ளதாக எங்களால் அறியக் கூடியதாக உள்ளது.
உண்மையாவே நாங்கள் பல இடங்களில், பல மாவட்டங்களில், பல காலங்களில் இந்த ஓ.எம்.பி அலுவலகத்தை எதிர்த்து நின்றோம்.
அரசாங்கத்தை காப்பாற்ற்றும் முயற்சி
மாவட்ட ரீதியில் அவர்கள் எந்த விதமான வேலை திட்டங்களையும் செய்யாத வகையில் நாங்கள் அவர்களை புறக்கணித்திருந்தோம்.
ஓ.எம்.பி அலுவலகம் என்பதையே நாங்கள் ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஓ.எம்.பி அலுவலகத்தால் எங்களுக்கு எந்த விதமான தீர்வும் கிடைக்கப் போவதில்லை. இந்த இலங்கை அரசாங்கத்தின் ஊடாக எமக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதால் நாங்கள், ஜெனீவாவின் முப்பத்தி எட்டாவது கூட்டத்தொடர் தொடக்கம் இன்று வரை நமது உண்மையான குரலை ஜெனிவாவில் பதிவு செய்து வருகின்றோம்.
உண்மைக்கும் நீதிக்குமாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் எங்களை இன்னல்களுக்கு ஆளாக்காமல், ஓ.எம்.பி அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற்றும் முயற்சியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
நாங்கள் இந்த அலுவலகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அரசாங்கத்தோடு சேர்ந்து அரச சம்பளத்தை வாங்குகின்ற மாவட்ட செயலகமாக இருந்தாலும் சரி, பிரதேச செயலகமாக இருந்தாலும் சரி அங்கே பணிபுரிகின்றவர்கள் கூட இதற்கு உடந்தையாக இருக்கின்றார்கள்.
எங்களுடைய உயிருக்கும் மேலான உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்பதற்கு அவர்களுக்கு முடியாமல் இருக்கின்றது.
அவர்கள் பதவிகளில் இருப்பதால் அவர்களுக்கு முடியாமல் இருக்கின்றது. ஆனால் அரசாங்கத்துக்கு சார்ந்து வேலை செய்ய மக்களிடத்தே ஓடி வருகின்றார்கள். தமது பணிகளை ஒருகாலமும் அவர்கள் சீராக செய்ததேயில்லை."என குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri
