இலங்கை அரசாங்கம் எம்மை விடுதலைப் புலிகளாகவே பார்த்தது: சமூக செயற்பாட்டாளர் ஆதங்கம்(Video)
விடுதலைப் புலிகளது நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டில் எத்தனையோ பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்தார்.
எமக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்,
அதற்காக அவர்கள் மீள விடுதலைப் புலிகளை உருவாக்குவதோ, அல்லது இலங்கையைப் பிரிப்பதோ, அல்லது இலங்கைக்கு விரோதமான ஒரு நிலைப்பாட்டில் இல்லை. ஆனால் அந்த குறிப்பிட்ட காலம் அவர்கள் விடுதலைப் புலிகளோடு வாழ்ந்திருக்கின்றார்கள். அந்த அரசாங்கத்தின் கீழ் இருந்திருக்கின்றார்கள். அதனை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
அதேபோல, இலங்கை அரசாங்கம் எங்களை விடுதலைப் புலிகளாகத்தான் கையாண்டது. எங்களை மதிக்கவில்லை. எங்களை சக மனிதராகக் கூட பார்க்கவில்லை.
எனது ஐந்து நண்பர்கள் கூட சுடப்பட்டார்கள். அவர்களுக்கு விடுதலைப் புலிகள் பற்றி எதும் தெரியாது. ஆனாலும் விடுதலைப் புலிகள் என்று அவர்களை சுட்டார்கள்.
தமிழ் மக்களது அரசியல் நியாயங்களை பேசும் அனைவரும் இங்கு விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.