தேசியத்தலைவர் இருக்கின்றாரா? பொய்யால் யார் நலன் அடைவர்
கடந்த 13 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்போராட்ட ஆதரவாளரும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவருமான பழ. நெடுமாறன், உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் இணைந்து தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டை கூட்டினர்.
அதில் ""தமிழீழ தேசிய தலைவர் உயிரோடு இருக்கின்றார்.அவர் மிக விரைவில் வெளிவந்து தமிழீழ விடுதலை போராட்டத்தை முன்னெடுப்பார்"" என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்றால் தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவர் தான். ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா? நடைமுறைச் சாத்தியம் உள்ளதாக இருக்க வேண்டும் அல்லவா? இந்த அறிவிப்பின் பின்னணி பற்றி அறிவுபூர்வமாக அலசுவது இன்றைய காலத்தின் தேவையாகும்.
இந்த அறிவிப்பின் பின் தமிழகத்திலும், தாயகத்திலும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அக்கப்போர்களை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈழத்தமிழினத்தின் அரசியல் பரப்பு
தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் தமிழ் ஊடகப்பரப்பில் சூடுபிடித்துள்ளது. இதனால் ஈழத்தமிழினத்தின் அரசியல் பரப்பில் 13 வருடங்களுக்கு மேலாக உண்மைக்கும், பொய்மைக்கும் இடையில் நடந்த உள்ளக மௌன யுத்தம் இன்று பெருவெடிப்பாக வெடித்திருக்கிறது.
எனவே இந்தச் சூழலில் தலைவர் இருக்கிறார் அல்லது இல்லை என்ற விவாதம் தேவையற்றது என கடந்து செல்ல முடியாது. இதற்கு முடிவுகட்டாமல் தமிழினம் தனது விடுதலைக்கான பயணத்தை தொடரவே முடியாது.
இன்று தமிழ் மக்கள் மேய்ப்பானற்ற மந்தைகளாக அலைகின்றனர், தலைமையுமின்றி, திட்டமுமின்றி, வழிவகையுமின்றி நட்டாற்றில் நிற்கின்றனர். எனவே இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டியது இன்றைய காலத்தின் உடனடி தேவையும். நிர்பந்தமுமாகும்.
2009ல் தலைவரின் மரணத்தை உண்மை என்று அறிவித்தவர்களை அன்று பொய் என்று சொல்லிய கூட்டம் இப்போது அதனையே உண்மை என்று சொல்கின்றது. அன்று உண்மையை சொல்லியவர்கள் துரோகியாக்கப்பட்டனர். அன்றைய காலச்சூழ்நிலையில் தொடர்ந்து பணம் வசூலிக்க தலைவர் இருக்கிறார் என்ற பொய் தேவைப்பட்டது.
இன்று அதே பொய்யை இன்னொரு கூட்டத்தினர் சொல்லி பணம் வசூலிப்பில் இறங்கியுள்ளனர். அவர்களை எதிர்ப்பதற்காகவே தலைவர் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மற்றைய தரப்புக்கு ஏற்பட்டிருக்கின்றது.
ஆனால் தமிழினத்திற்கு உண்மையே தேவைப்படுகின்றது. இதுவே அவசியமானதும். வயது முதிர்ந்த காலத்திலும் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டியவர்கள் விழித்திருந்து பகல் கனவு கண்டு அதனையே உண்மை என்று பேசுவது வியப்பானதே!
சமூகத்தின் அறிவியல் மட்டம்
ஒரு சமூகத்தின் அறிவியல் மட்டம் என்னவோ அதிலிருந்து தான் தலைவர்களும், சமூகப்பிரதிநிதிகளும் தோன்றுவார்கள். தமிழ் சமூகம் நீண்ட நெடிய பண்பாட்டையும், அறிவியல் வளர்ச்சியையும், மொழி வளர்ச்சியையும், அரசியல் முதிர்ச்சியையும் கொண்ட ஒரு சமூகம்.
எனவே தமிழ்ச் சமூகம் இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய அறிவியல் வளர்ச்சியோடு இப்போது பயணிக்கிறதா? என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டு இருக்கின்றது.
இப்போது தமிழ்த் தேசிய இனம் உண்மையையும்,பொய்மையும் வேறுபடுத்தி கண்டறிய முடியாமல் தவிப்பது என்பதானது தமிழ் தேசிய இனத்திற்கான அவமானமாக கருதப்பட வேண்டும்.
ஒரு செயல் அது தரவல்ல விளைவுகளில் இருந்து தான் அச்செயல் பற்றி எடை போடப்பட வேண்டும்"" இந்த அறிவிப்பினால் யார் நன்மையடைவர்? யாருக்கு தீங்கு ஏற்படும் என்ற தளத்திலிருந்து தான் நோக்கப்பட வேண்டும்.
இங்கு வீரதீர உணர்வுகளுக்கும், கற்பனைகளுக்கும், மனவிருப்புக்களுக்கும் இடம் கிடையாது. இதனை முற்றுமுழுதாக அறிவியல் ரீதியில் அணுக வேண்டுமே தவிர அதை விடுத்து மெத்தனப் போக்கில் புலனாய்வு அமைப்புகளின் சதி வேலை என்று முடிவுகட்டி முடிச்சு போட்டு வைத்துவிட்டு கடந்து செல்ல முடியாது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
நமது இயலாமைக்கும் எமது தவறுகளுக்கும் பொறுப்பேற்காமல் மற்றவர்கள் மீது பழி போட்டு நம்மை நாமே நியாயப்படுத்தி திருப்தியடைவது அறிவியலுக்கு முரணானது.நமது வளர்ச்சிக்கு தடையானதும் கூட.
எனவே தலைவர் இருக்கிறார் என்ற அறிவிப்பானது யாருக்கு நன்மை பயக்கும் என்ற தளத்திலிருந்து ஆராயப்பட வேண்டும்.முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்து 14 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் உலகளாவிய ரீதியில் 33 நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கின்றது.
இந்த நிலையில் தமிழீழத் தேசியத் தலைவர் உயிரோட இருக்கின்றார் என்ற அறிவிப்பின் மூலம் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கும்.
அதே நேரத்தில் ஈழத்தமிழர்களுக்கான நீதி வேண்டிய போராட்டங்களும், மனித உரிமை கோட்பாடுகளும், ஈழத்தமிழர்களுக்கான புலம்பெயர் கட்டமைப்புகளும் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும். அவர்கள் தமது நீதிக்கான மனித உரிமைக்கான செயற்பாடுகளுக்கு பல தடைகளை ஏற்படுத்தும்.
அத்தோடு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படலாம், முடக்கப்படலாம், பலதரப்பட்ட தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்படலாம். அவ்வாறே தமிழர் தாயக பரப்பில் உள்ள முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசியவாதிகள் கைது செய்யப்படலாம். அவர்களுடைய இயல்பு வாழ்க்கை முடக்கப்படலாம். அதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது.
தமிழர் தாயக நிலங்கள் அபகரிப்பு
அத்தோடு வடகிழக்கில் மேலும் இராணுவ குவிப்பை ஏற்படுத்தி தமிழர் தாயக நிலங்கள் அபகரிக்கப்படலாம். உயர் பாதுகாப்பு வளையமும், வீதித் தடைகளும், இராணுவ நிர்வாகமும் தமிழர் தாயகத்தில் கோலோச்சும். அதே நேரத்தில் சிங்கள தேசத்தில் மீண்டும் ஒரு கொதிநிலையை ஏற்படுத்தி சிங்கள மக்களை உசுப்பேத்தி தமிழ் மக்கள் மீதான இனவன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.
அடுத்த இந்த அறிவிப்பானது தமிழ் மக்கள் ஐ.நா மனித உரிமைகள் நோக்கிய மனித உரிமை செயற்பாடுகளுக்கும், போர் குற்ற விசாரணை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவை போன்றவற்றுக்கான சாட்சியங்கள், ஆதாரங்கள் என்பவற்றை கேள்விக்கு உள்ளாக்கும்.அதை பற்றி விரிவாக பார்ப்பது இங்கே அவசியமானது.
சனல் 4 தொலைக்காட்சி கொலைக்களம் (Killing Field ) என்ற ஒரு ஆவண படத்தை தயாரித்தது. அந்த ஆவண படத்தை ஐ.நா மனித உரிமை மன்றத்திலும் காண்பித்தனர். அது உலகம் முழுவதிலும் பரவல் அடைந்து பெரும் பேசுபொருளாகியது.
இலங்கை அரசு மீதான கண்டனங்கள் குவிந்தன. அப்போது ராஜபக்சர்கள் அது பொய்யான ஒளிப்பட நாடாக்கள் என்றனர். அந்த ஒளிப்பட காட்சியில் தலைவர் பிரபாகரனின் உடலமும், இசை பிரியாவினது உயிர் உள்ள மற்றும் உயிரற்ற ஒளிப்படங்களும் பாலச்சந்திரனுடைய ஒளிப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டமை முக்கியத்துவம் பெற்றிருந்தன.
அதனை ராஜபக்சகள் பொய்யானவை என்றும் வேண்டுமென்றே சோடிக்கப்பட்ட ஒளிநாடாக்கள் என்றும் குற்றச்சாட்டி மறுதலித்தனர். எனவே இதனை உறுதிப்படத்த ஐ.நா மனித உரிமை ஆணையம் ஒரு விசேட நிபுணர் குழுவை நியமித்து அந்த ஒளிப்பட, புகைப்பட நாடாக்களை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.
புதிய சர்ச்சை
அந்த ஆய்வின் முடிவில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் உள்ள நபர்களும், காட்சிகளும், புகைப்படங்களும் உண்மையானது என்றும் அவை அந்தக் களச்சூழ்நிலையின் தட்பவெட்பங்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் ஒத்தவை என்றும், அவை எடுக்கப்பட்ட நேரமும் இடவிளக்கவியல் ஆள்கூறும் உண்மையானவை என்றும் தமது முடிவை அறிவித்தனர்.
இதன் மூலம் உலகளாவிய சமூகத்துக்கு ஒரு செய்தி சொல்லப்பட்டுவிட்டது. அது என்னனெனில் தேசியத் தலைவர் , அவரது மகன் பாலச்சந்திரன், ஊடகவியலாளர் இசைப்பிரியா என்போரும் உயிருடன் இல்லை என்பது தான் ஆனால் இப்போது தலைவர் இருக்கிறார் என்று சொல்வதன் மூலம் புதிய சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது.
மனித உரிமை ஆணையத்தில் நிரூபிக்கப்பட்ட சாட்சியங்கள் இப்போது நெடுமாறன் அவர்களின் அறிவிப்பினால் அவற்றின் உண்மைத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றது.
இதனைப் பயன்படுத்தி ராஜபக்சர்கள் இனிவரும் காலத்தில் போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பவை வருகின்ற போது நெடுமாறன் அவர்களுடைய அறிவிப்பை உதாரணங்காட்டி பாலச்சந்திரன் கொல்லப்படவில்லை, இசைப்பிரியாவும் கொல்லப்படவில்லை என்று கூறி தப்பித்துக்கொள்வர்.
அத்தோடு கடந்த 14 ஆண்டுகளாக புலம்பெயர் தமிழர்களும், தாயகத்தமிழர்களும் மிக கடுமையாக உழைத்த உழைப்பும், அவர்களால் நிரூபிக்கப்பட்ட சிங்களப் போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் மறுதலிப்பதாகவே நெடுமாறனின் அறிவிப்பு அமைந்துவிட்டது.
தமிழினத்தின் ஒரு யுகத்தின் தலைவர்
தேசியத்தலைவர் தமிழினத்தின் ஒரு யுகத்தின் தலைவர். அவருடைய போராட்டத்திற்கும், செயல் திறனுக்கும் ஒரு எல்லைக்கோடு உண்டு. அந்த எல்லைக் கோட்டுக்குள் நின்று கொண்டு அவர் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத மிக பெரும் உச்சத்தை எட்டி நின்றவர்.
அத்தகையவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தனது மக்களையும், தன்னுடைய போராளிகளையும் களத்தில் விட்டு தப்பி சென்றார் என்று சொல்வதும் தமிழ்த் தேசியத் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும். அவர் தான் கொண்ட கொள்கைக்காக தான் ஏந்திய ஆயுதத்தின் மீதான நம்பிக்கையுடன் கழுத்தில் கட்டிய சயனைட் குப்பியுடன் இறுதிவரை களமுனையில் நின்று போரிட்டார் என்பது தான் உண்மை.
இப்போது தலைவர் இருக்கின்றார் என்ற செய்தி அறிவியலுக்கும் கற்பனைவாதத்துக்கும், பொய்மைக்கும் இடையிலான யுத்தமாகும். இந்த யுத்தத்தில் தமிழ் தேசிய இனம் இருபத்தோராம் நூற்றாண்டுக்கு உரியதான வகையில் அறிவுபூர்வமாக தன்னை வடிவமைக்க வேண்டிய நிர்பந்தத்தை கொண்டிருக்கின்றது.
பொய்மைகளையும், கற்பனைகளையும், விருப்பு வாதங்களையும் கடந்து யதார்த்தம் என்னவோ, நடைமுறை என்னவோ அதற்கு ஏற்ற வகையில் உலகளாவிய அரசியல் போக்கிற்கு இசைவாக்கி, அறிவு சார்ந்து மூலோபாயத்தை வகுத்து பயணிப்பது தான் தமிழ்த்தேசிய வாதிகளின் இன்றைய கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
