எத்தியோப்பியாவில் வாரத்தில் ஒரு முறை மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படுகிறது
எத்தியோப்பிய போன்ற நாடுகளில் வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது எனவும் இலங்கையில் அவ்வாறான நிலைமை இல்லை என்பது குறித்து பொது மக்கள் நன்றி கூற வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு வரலாற்றில் என்றும் எதிர்நோக்காத மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம். இலங்கை மட்டுமல்ல முழு உலகமும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது.
இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டங்களால் பாகிஸ்தான், நேபாள மக்களும் வீதியில் இறங்கியுள்ளனர்.
இது 1930 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகம் எதிர்நோக்கி வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி.உலகில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடான எத்தியோப்பியாவில் வாரத்திற்கு ஒரு முறை மாத்திரமே சமையல் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.
வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரமே பெட்ரோல் வழங்கப்படுகிறது. இப்படியான நிலைமை 1930 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகில் ஏற்பட்டுள்ளது.
கோவிட் காரணமாக உலகில் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகில் பலமிக்க நாடான அமெரிக்காவும் மிகப் பெரிய பணவீக்கத்தை சந்தித்துள்ளது. உலகில் ஏனைய நாடுகளில் நூல் அறுந்த பட்டம் போல் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.
2006 ஆம் ஆண்டு முதல் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை ஈடு செய்ய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அரசியல்வாதிகளின் போராசையை காரணம் எனவும் பந்துல குணவர்தன விமர்சித்துள்ளார்.