குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி : மூன்று மடங்காக அதிகரித்துள்ள பணத் தொகை
வறுமையில் இருக்கும் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் சமூகப் பாதுகாப்புக்கான கொடுப்பனவை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாம் இதுவரை கடைப்பிடித்து வந்த திட்டங்கள் காரணமாக நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு பல வசதிகளையும் சலுகைகளையும் வழங்க முடிந்துள்ளது.
வழங்கப்படும் நிவாரணம்
'உறுமய' திட்டத்தின் கீழ் இருபது இலட்சம் குடும்பங்கள் காணி உரிமையாளர்களாக மாறுவர். பல தலைமுறைகளாக இழந்த காணி உரிமையை அவர்கள் மீண்டும் பெறுவார்கள்.
வறுமையில் இருக்கும் மற்றும் பாதிக்கப்படக் கூடியவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்கும் வகையில் சமூகப் பாதுகாப்புக்கான கொடுப்பனவை மூன்று மடங்காக உயர்த்த முடிந்தது. அதனால் குறைந்த வருமானம் பெறும் 24 இலட்சம் குடும்பங்களுக்கு 'அஸ்வெசும' வழங்கப்படுகிறது.
45 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 'சுரக்ஷா' காப்புறுதித் திட்டம் வழங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியம் புலமைப் பரிசில்களை வழங்குகிறது.
நோயாளிகளுக்கு வழங்கும் நிவாரணத் தொகையையும் ஜனாதிபதி நிதியம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. 'மலைநாட்டு தசாப்தம்' என்ற திட்டத்தின் கீழ் 89 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்களை மேம்படுத்தும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். அதற்காக ஒரு பிரதேச சபைக்கு ரூ.100 மில்லியன் வரையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
வரவு செலவுத் திட்ட பன்முகப்படத்தப்பட்ட நிதியைக் கொண்டு தேர்தல் தொகுதிகளில் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 25 பிரதேச சபைகளைத் தெரிவு செய்து விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.
சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் பலர் பயனடைகின்றனர். அந்தத் துறையில் மேலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். சரிந்து கிடந்த பொருளாதாரம் ஓரளவு வலுவடைந்துள்ளது. அதன் பலனாக படிப்படியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |