இலங்கை மக்களுக்கு பிரதமர் வழங்கியுள்ள நற்செய்தி
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை அதிகரிப்பதற்கான திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அக்கிராசன உரைதொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்களுக்கு நிவாரணம்
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சியிடம் உள்ளது வெறும் வாய் வீச்சு மட்டுமே தவிர அவர்களிடம் எந்த உறுதியான வேலைத்திட்டமும் கிடையாது.
அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு திட்டங்களை முன்வைத்து வருவதுடன் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை அதிகரிப்பதற்கான திட்டமும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிதி ஒத்துழைப்பு தொடர்பில் நம்பிக்கை தரும் முன்னேற்றம் காணப்படுவது போன்று பரிஸ்கிளப் ஆதரவும் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது.
நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்து அந்நிய செலாவணி நிலைமை சுகமாகி வரும் நிலையானது சர்வதேசம் இலங்கை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
பல்வேறு நெருக்கடிகள் சவால்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ள ஒத்துழைப்பு காரணமாக நாட்டின் விவசாயத்துறை சிறந்த முன்னேற்றமடைந்துள்ளது. அதற்கான திட்டங்களை மேலும் சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாட்டு கடன் செலுத்த முடியாத நிலையில் நாடு வங்குரோத்து நிலையில் காணப்பட்ட நிலையில் சர்வதேச ரீதியிலான எமது பிரவேசம் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
கடன் தொடர்பான நம்பிக்கையை மீள ஸ்தாபிப்பது தொடர்பில் இக்கால கட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் அதற்கு சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புக்களும் கிடைத்து வருகின்றமைக்காக அந்த நாடுகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.