தாமரைக் கோபுரத்தை மக்கள் பார்வையிடலாம்! திறக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது
தெற்காசியாவின் மற்றும் இலங்கையின் மிகப்பெரிய கட்டிடமான தாமரை கோபுரம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக 15 ஆம் திகதி முதல் உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என அனைவரும் நுழைவு சீட்டினை பெற்றுக்கொண்டு தாமரை கோபுரத்திற்குள் செல்ல முடியும்.
தாமரை கோபுரத்திற்கான செலவுகள்
2012 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி சுமார் 30,600 மீட்டர் சதுர பரப்பளவில் குறித்த தாமரை கோபுரத்தின் கட்டுமாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதற்கு தேவையான நிதி உதவியாக சீன எக்சிம் வங்கி 68 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியதுடன் மிகுதி செலவுகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமறை ஆணைக்குழு ஏற்றுள்ளது.
தாமரை கோபுரத்திற்கான கட்டுமான செலவுகள் 104.3 மில்லியன் டொலர்களாக கணக்கிடப்பட்டிருந்த போதிலும் 7 வருடங்களின் பின்னர் அதன் கட்டுமாணப்பணிகள் நிறைவைடையும் போது 113 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
350 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட குறித்த தாமரை கோபுரம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.
இருப்பினும் அது இன்று வரையில் மக்கள் பாவனைக்காக திறக்கப்படவில்லை.
தாமரை கோபுரத்தின் அமைப்புகள்
தாமரை கோபுரத்தில் தாமரை மொட்டுக்கு கீழுள்ள பகுதியானது (basement) 3 மாடிகளை கொண்டது. அவற்றில் டிஜிட்டல் சினிமா மண்டபம், பிரபலமான வணிக வங்கிகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
தற்போது வரையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 70 சதவீதமும் 30 சதவீதமான வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தாமரை கோபுரத்தில் முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தாமரை கோபுரத்தின் மொட்டு பகுதியானது 7 மாடிகளை கொண்டுள்ளது. இவற்றில் ஐந்தாவது மாடியானது சுற்றும் அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 7 ஆவது மாடியானது பல்கனியாக அமைக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள்
2000 ரூபாவை கட்டணம் செலுத்துபவர்களுடன் வருகை தரும் 12 அல்லது 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு 500 ரூபாவும் , 500 ரூபா செலுத்துபவர்களுக்கு 200 ரூபாவும் அறவிடப்படும்.
பாடசாலை மாணவர்களுக்கும் 200 ரூபா கட்டணம் அறவிடப்படும்.
தாமரை கோபுர வருகை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினால் முன்னரே அறிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்காக பிரத்தியேக நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.