ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நஷ்டத்தில் இயங்க இதுவே காரணம்: எரான் விக்ரமரத்ன
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி, அதனை சரியான நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போலியான கௌரவத்தை முன்நிறுத்தி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீண்டும் கையகப்படுத்தியதாகவும் இதன் காரணமாக அந்த நிறுவனம் அன்றில் இருந்து இதுவரை 250 பில்லியன் ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எரான் விக்ரமரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு 43.6 வீத பங்கை வழங்கினார். இலங்கை அரசுக்கு 51 வீதம். முகாமைத்துவம் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
1998ஆம் ஆண்டு முதல் முகாமைத்துவம் அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பீட்டர் ஹில் என்பர் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.
2008ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது. நாட்டின் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் கொழும்பில் இருந்து லண்டன் செல்ல ஆசனங்களை கோரினர்.
ஆசனங்கள் ஏற்கனவே சாதாரண பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால், ஜனாதிபதியின் குழுவினருக்கு ஆசனங்களை வழங்க முடியாது என அந்த நிறுவனம் கூறியது.
இப்படி கூறியதும் பெரிய கோபம் ஏற்பட்டது. சரியாக முகாமைத்துவம் செய்ய இந்த நிறுவனத்தை நாங்கள் வழங்கியுள்ளோம். நஷ்டத்தை இல்லாமல் செய்யவே நிறுவனம் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
ஆசனங்களை வழங்கவில்லை என்பதால், நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய பீட்டல் ஹில் என்பவரின் விசா அனுமதி காலம் இரத்துச் செய்யப்பட்டது.
வேறு விதமாக கூறுவதென்றால், உனக்கு தேவையான வகையில் செயற்பட முடியாது நானே நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாங்கள் கூறினால், எங்களது அணி செல்ல வேண்டும் என்ற பிரச்சினையே ஏற்பட்டது.
இதனையடுத்து பேச்சுவார்த்தைகளை நடத்திய எமிரேட்ஸ் நிறுவனம் நீங்களே இந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தை கவனியுங்கள் என்றுக் கூறி 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறியது.
அடுத்த 11 ஆண்டுகளில் என்ன நடந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு வரை மாத்திரம் 250 பில்லியன் நஷ்டம்.
அரசாங்கத்தின் ஒரு நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் தொழில் புரிந்து வருகின்றனர்.
அந்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டம் மட்டுமே 250 பில்லியன் ரூபாய். நாட்டில் வாழும் 90 சத வீதமான மக்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்ததில்லை.
விமானத்தில் என்றுமே கால் வைக்காத நாட்டில் கிராமங்களில் இருக்கும் வறிய மக்கள் கூட தமது வரி மூலம் அந்த நஷ்டத்திற்கான இழப்பீட்டை செலுத்த நேரிட்டுள்ளது. இது முற்றிலும் அநீதியானது.
தாமரை தடாகமும் இவ்விதமாக பொய்யான கௌரவத்திற்காக மக்களின் பணத்தை அழித்த திட்டம் எனவும் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri