வெளியாகியுள்ள இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் : சபாநாயகர் பதவியை குறிவைக்கும் இரு கட்சிகள்
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆதரவுடன் பாஜக ஆட்சியைமைக்க தயாராகி வருகிறது.
இதற்கு கைமாறாக சபாநாயகர் பதவியை கோர இருவரும் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றிருக்கிறது.
இறுதிக்கட்ட தேர்தல்
முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் திகதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் திகதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ஆம் திகதியும், 96 தொகுதிகளுக்கு 4ஆம் கட்டமாக மே 13ஆம் திகதியும், 5ஆம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ஆம் திகதியும், 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ஆம் திகதி 6ஆம் கட்டமாகவும், ஜூன் 1ஆம் திகதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.
இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்தன.
தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், கடும் போட்டி நிலவியது. இறுதியாக பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியது.
பாஜகவை எடுத்துக்கொண்டால் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது. இந்த இரண்டு கட்சிகளிடம் மொத்தமாக 33 தொகுதிகள் இருக்கின்றன. பாஜக கூட்டணியில் இதை கழித்துவிட்டால் 260 தொகுதிகள் மட்டுமே வரும். பெரும்பான்மை பெற 272 தொகுதிகளை வசப்படுத்தியிருக்க வேண்டும்.
கட்சித்தாவல் தடை சட்டம்
எனவே சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் ஆதரவை பாஜக நம்பியிருக்கிறது. இதற்கு கைமாறாக தங்களுக்கு மக்களவை சபாநாயகர் பதவி வேண்டும் என்று இரு கட்சிகளும் கோர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாநாயகர் பதவியை கோருவதற்கு பின்னணியில் வலுவான காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, தங்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாய்வதை தடுக்க சபாநாயகர் பதிவயை இக்கட்சிகள் கோருகின்றன.
வரும் 5 ஆண்டுகளில் ஒரு வேளை காங்கிரசுக்கு ஆதரவளிக்க இந்த கட்சிகள் முயலும் பட்சத்தில் சபாநாயகர் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பிருக்கிறது.
ஆனால், சபாநாயகர் பதவி தங்களிடம் இருந்தால் இதற்கான வாய்ப்பு இருக்காது. மட்டுமல்லாது சபாநாயகர் பதவி நாடாளுமன்றத்தில் அதிகாரமிக்க பதவி என்பதால் இதற்கான போட்டி தீவிரமடைந்திருக்கிறது.
இன்று மாலை இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் பங்கேற்கிறார்கள். இக்கூட்டத்தில் சபாநாயகர் பதவி குறித்த தங்கள் கோரிக்கையை எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |