கதவடைப்பு ஒரு இலகுவான அரசியல் வியாபாரம்
courtesy-யதீந்திரா
முத்தையன் கட்டு மிகவும் பின்தங்கிய பகுதி. அந்தப் பகுதியில் பாடசாலையில் படிப்பதற்கு மாணவர்கள் இல்லை. பெண் பிள்ளைகள் பருவமடைந்தவுடன் திருமணம். கூலிவேலை, காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவது. இலைவகள் தான் குறித்த பகுதியின் பிரதான தொழில்கள்.
யுத்தம் முடிவுற்று பதினாறு வருடங்களாகிவிட்டது. அந்தப் பகுதியிலுள்ள மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்று எந்தவொரு அரசியல் தரப்பும் முயற்சிக்கவில்லை. ஆனால் அந்தப் பகுதியில் ஒருவர் உயிரிழந்தவுடன், முத்தையன் கட்டு இப்போது தமிழ்த் தேசிய பூமியாகிவிட்டது.
கிடைக்கும் தகவல்களின்படி, முத்தையன்கட்டில் நீண்டகாலமாக நிலைகொண்டிருந்த இராணுவ முகாம் விரைவில் அகற்றப்படவுள்ளது. ஏற்கனவே அங்கிருந்த இராணுவத்தின் பெரும்பகுதி வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது. அந்த முகாமிலிருக்கும் பொருட்களுக்கான காவலாளிகளாக சில எண்ணிக்கையான இராணுவத்தினர் மட்டுமே அங்கிருக்கின்றனர்.
இளைஞன் உயிரிழப்பு
முகாமின் பொருட்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறித்த இராணுவ முகாம் நீண்டகாலமாக நிலைகொண்டிருப்பதால் அப்பகுதியிலுள்ள மக்களும் இராணுவத்தினருடன் நெருக்கிப் பழகி வருகின்றனர். இந்த அடிப்படையில் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் சிலர் இராணு சிப்பாய்களுடன் தாராளமாக பழகி வருகின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
முத்தையன் கட்டுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இரவு நேரத்தில் இராணுவ முகாமிலிருந்த சில பொருட்களை களவாக ஏற்ற முற்பட்ட போது, கடைமையிலிருந்த இராணுவச் சிப்பாய்கள்கள் தாக்கியிருக்கின்றனர். அவர்களிடமிருந்து தப்பியோடும் முயற்சியில் குளத்திற்குள் குதித்ததன் காரணமாக ஒருவர் இறந்திருக்கின்றார். இராணுவ முகாமிலிருந்து பொருட்களை ஏற்ற முற்பட்டால், அதனைப் பார்த்துக் கொண்டு இராணுவத்தினர் சும்மா இருப்பார்களா என்பது முதல் கேள்வி.
ஒரு வேளை குறித்த இளைஞர் தாக்குதலினால் குளத்திற்குள் நீத்த முடியாமல் மூழ்கியுமிருக்கலாம். இதற்குத்தான் தற்போது கதவடைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் தொடர்பில் ஆரம்பத்தில் அதிகம் பேசப்பட்டிருக்கின்றது. சம்பந்தன், அவரது நாடாளுமன்ற உரைகளில் இது பற்றி பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அதே போன்று வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக சில முகாம்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. இந்த விடயத்தில் இன்னும் அதிக மாற்றங்கள் தேவை என்றால் அது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேசிப் பார்க்கலாம். ஜனாதிபதியுடன் பிரத்தியேக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கலாம்.
ஆனால் இராணுவ முகாம் ஒன்றில் பொருட்களை களவாக ஏற்ற முற்பட்டவர்களை ஆதாரமாகக் கொண்டு, இராணுவ பிரசன்னத்தை எதிர்ப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. உதாரணமாக வீதியால் சென்ற ஒரு பெண்ணை வழிமறித்து, இராணுவத்தினர் தவறாக நடந்திருந்தால் அல்லது இளைஞர் ஒருவர் தமிழர் என்னும் காரணத்திற்காக மட்டும் தாக்கப்பட்டிருந்தால், நிச்சயம் இராணுவ பிரசன்னத்தை எதிர்ப்பதில் பொருளிருந்திருக்கும் ஆனால் இங்கோ காரணமும் தவறு, அதற்காக முன்வைக்கப்படும் வாதமும் தவறானது.
இந்த விடயத்தை எவர் முன்னெடுக்கின்றார் என்னும் விடயம் இந்தக் கட்டுரையாளருக்கு முக்கியமானதல்ல. எவர் இவ்வாறான விடயத்தை செய்தாலும், அதன் சமூகப் பெறுமதி பற்றியே நாம் ஆராய வேண்டும். விடயங்களை இரண்டு வகையில் நோக்கலாம். ஒன்று அறிவு ரீதியாக நோக்குவது இரண்டு, பொதுப் புரிதலிருந்து அறிய முற்படுவது. ஆங்கிலத்தில் இதனை கொமன் சென்ஸ் என்பார்கள்.
ஈழத் தமிழரின் அரசியல்
ஈழத் தமிழரின் அரசியல் பயணத்தை எடுத்து நோக்கினால் முதலில் மிதவாத வழிமுறை, பின்னர் ஆயுத வழிமுறை என்னுமடிப்படையில் விடயங்கள் கையாளப்பட்டன. தற்போதுள்ள அரசியல் சூழல் இரண்டு அணுமுறைகளினதும் தோல்விக்கு பின்னரான காலகட்டமாகும். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியின் காலத்தில் கதவடைப்பு என்பது ஒரு எதிர்ப்பு அரசியல் நடவடிக்கையாக கையாளப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய சூழலில் கூட ஜனநாயக தமிழ் தலைவர்கள் எவரும் சாத்வீக அரசியலை உச்சநிலைக்கு கொண்டு செல்லவில்லை. உணவு தவிர்ப்பு நடவடிக்கையின் மூலம் ஒரு தமிழ் தலைவர் உயிரிழந்த வரலாறு இல்லை. ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பது போல், மேற்படி உதாரணம் தமிழ் தலைவர்களின் அன்றைய சாத்வீகப் போராட்டத்திலிருந்த போதைமைக்கு தெளிவான சான்றாகும்.
ஒரு வேளை அன்றைய சூழலில் சாத்வீகப் போராட்டங்களின் போது ஒரு தமிழ் தலைவர் உயிரிழந்திருந்தால், அன்றைய சூழலில் மக்கள் எழுச்சிக்கான காரணமாக அது இருந்திருக்கலாம். இந்தியாவில், ஆந்திர தேசக் (மானில) கோரிக்கையை முன்வைத்து பொட்டி சிறிராமுலு என்பவர், 56 நாட்கள் தொடர் உணவு தவிர்ப்பை மேற்கொண்டு உயிரிழந்தார். அதன் மூலம் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்தே ஆந்திரக் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. அதுவே பின்னர் இந்தியாவின் மொழிவாரி மானில முறைமையாக மாற்றமடைந்தது.
ஆனால் பொட்டி சிறிராமுலு போன்று, தியாகத்தைச் செய்வதற்கான அர்பணிப்புள்ள தமிழ் தலைவர் எவரும் அன்றைய தமிழரசு கட்சியில் இருந்திருக்கவில்லை. தமிழ் அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரையில் அர்ப்பணிப்பை மக்களிடம் எதிர்பார்த்தார்களே தவிர, தங்களை உச்சமாக அர்ப்பணிக்கத் தயாராக இருந்திருக்கவில்லை.
வக்கில் தொழிலும் வேண்டும், நாடாளுமன்ற கதிரைகளும் வேண்டும் எனும் அடிப்படையில் தான் இருந்தனர். இப்போது அந்த நிலைமை முன்னரை விடவும் படு மோசமாகிவிட்டது. முன்னர் இருந்தவர்களிடம் நேர்மையாவது இருந்தது.
தமிழர் அரசியல் ஆயுத இயக்கமாக மாற்றமடைந்த பின்னர்தான் தங்களை தியாகம் செய்வதற்கு ஒரு தலைமுறை வெளியில் வந்தது. அந்தத் தியாகங்களும், இறுதியில் விழலுக்கிறைத்த நீரானது. அது தொடர்பில் அதிகம் பேசுவதில் இனிப் பயனில்லை.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் நீங்கள் உங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, ஒரு நாள் கடைகளை பூட்டி, மறுநாள் திறப்பதால், தமிழர் அரசியலில் எதைச் சாதித்துவிட முடியும்? ஒரு வேளை வடக்கு கிழக்கில் கடைகள் பூட்டப்பட்டன என்னும் செய்தியைக் கொண்டு, தமிழ் மக்கள் தமிழரசு கட்சியுடன்தான் இருக்கின்றனர் என்னும் பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம். இதற்கப்பால் கதவடைப்பு என்பது ஒரு நாள் கூத்தாகவே முடிவுறும்.
கதவடைப்பு
தமிழ் மக்கள் தங்களின் பொது அறிவு கொண்டு கேட்க வேண்டிய கேள்வி, இவ்வாறான ஒரு நாள் கூத்துக்களால் கடந்த பதினாறு வருடங்களில் ஏதாவது உருப்படியாக நடந்திருக்கின்றதா? அரசியல்வாதிகள் தங்களின் கட்சி நலன்களுக்காக எதனையும் கூறலாம் - அவர்களை ஆதரிப்பவர்கள் எவ்வாறான நியாயங்களையும் கூறலாம்.
ஆனால் சமானிய மக்களை நோக்கிச் சிந்திப்பர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, காலாவதியாகிப் போன இவ்வாறான அணுகுமுறைகளால் என்ன பயன்.
இன்னொரு விடயத்தையும் நீங்கள் நோக்க வேண்டும். வடக்கு கிழக்கில் இடம்பெறும் இவ்வாறான அடையாள எதிர்ப்புக்களை தென்னிலங்கை ஒரு விடயமாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஏன் அப்படி? வடக்கு கிழக்கு அடிப்படையில் ஒரு தொழில்துறை பகுதியல்ல. தொழில்துறைப் பகுதிகள் மக்களால் முடக்கப்படும் போது நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும்.
அவ்வாறான சூழலில் அரசாங்கம் போராட்டக் காரர்களுடன் பேசுவதற்கு இறங்கிவரும். கடந்த பதினாறு வருடங்களில் தமிழ் பகுதிகளில் பல விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
எழுக தமிழ் தொடங்கி பொத்துவில் தொடங்கி பொலிகண்டி என்னும் பெயரிலான நிகழ்வு வரையில் எதிர்ப்புக்கள் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகளின் பின்னர் கொழும்பின் ஆட்சியாளர்கள் தமிழ் கட்சிகளுடன் பேசுவதற்காக இறங்கி வந்திருக்கின்றார்களா? கடந்த பதினாறு வருடங்களில் ஒப்பீட்டடிப்படையில் அதிகமானவர்கள் திரண்ட ஒரு நிகழ்வு என்றால், பொத்துவில் தொடங்கி பொலி கண்டி கும்பல் நிகழ்வை குறிப்பிடலாம் - அதிகமானவர்கள் கும்பலோடு கும்பலாக இணைந்திருந்தனர் ஆனால் அதனைக் கூட தென்னிலங்கை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை.
கொஞ்சமாவது கொமன் சென்சை பயன்படுத்தினால் இதற்கான பதில் இலகுவானது. கொழும்பின் அதிகார பீடம் உங்களை திரும்பியே பார்க்கவில்லை என்றால் இது போன்ற நடவடிக்கைகளை எதற்காக செய்ய வேண்டும். வடக்கு கிழக்கில் கடைகளை பூட்டினால் ஒரு நாள் வியாபாரம் பாதிக்கப்படும், அதன் நஸ்டம் முழுவதும் கடைகளை பூட்டுபவர்களுக்கு மட்டும்தான்.
அநுரகுமாரவிற்கோ ஹரினி அமரசூரியவிற்கோ, பிமல் ரத்நாயக்கவிற்கோ எந்தவொரு நஸ்டமும் ஏற்படப் போவதில்லை. இதனை இன்னும் இலகுவாக புரிந்து கொள்வதற்காக முன்னர் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை சொல்கின்றேன் - அப்போது அரசியல் கைதிகள் என்போர், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி, சிறைக்குள் உணவு தவிர்ப்பை மேற்கொண்டனர்.
இது தொடர்பில் அப்போது வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரியுடன் பேசினார், மைத்திரி கூறியது – அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் சாப்பிடாமல் இருந்தால் அவர்கள்தான் செத்துப் போவார்கள்.கதவடைப்பு என்பது, வீதிகளில் சிலர் கூடி காட்போட் மட்டைகளை உயர்த்திக் கொண்டிருப்பது.
இவ்வாறான நடவடிக்கைகளால் சில அரசியல்வாதிகள் பயன்படலாம். அடுத்த தேர்தலில் தங்களின் வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கு இவ்வாறான விடயங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமூதாயத்தில் சிந்திக்கும் தரப்பாக இருப்பவர்கள் தங்களுக்குள் கேட்க வேண்டிய கேள்வியோ, மக்கள் பற்றியதாக இருக்க வேண்டும்.
தங்களை படித்தவர்களாக எண்ணிக் கொள்பவர்கள், பாமரர்களை ஏமாற்ற முற்படும் போதெல்லாம், பாமரர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் அவர்களின் பொது அறிவு மட்டும்தான்.
பொறுப்பு துறப்பு❗இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் யதீந்திரா அவரால் எழுதப்பட்டு, 17 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. |



